தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்.

வேலூர்


சிமெண்டு சாலை போட வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கல்குப்பம் மதுராஅரிமாநகர் கிராமத்தில் இடுகாட்டு சாலை 600 மீட்டர் மண் சாலையாக உள்ளது. மழை பெய்யும்போது சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. அதில் மக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர். எனவே, அந்தச் சாலையை தரம் உயர்த்தி சிமெண்டு சாலையாக போட வேண்டும்.

-ராஜா, போளூர்.

வாரச்சந்தையில் 'குடி'மகன்கள் அட்டகாசம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை குடிமகன்களின் கூடாரமாக மாறிவிட்டது. வாரச்சந்தை கடைகளில் இரவில் வரும் மதுபிரியர்கள் மதுபானத்தை குடித்து அங்கேயே காலிப் பாட்டில்களை போட்டு உடைக்கின்றனர். வாரச்சந்தையில் இரவில் தகாத செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் தண்டிக்க வேண்டும்.

-பாண்டியன், சோளிங்கர்.

பூங்காவை சீரமைக்க வேண்டும்

திருவண்ணாமலை நகராட்சி தாமரை நகரில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா உள்ளது. அந்தப் பூங்கா தற்போது பராமரிப்பின்றி உள்ளது. திருவண்ணாமலையில் கோவில் தவிர பொழுதுப்போக்கு அம்சங்கள் குறைவாக உள்ளது. ஆகையால் தாமரை நகர் பூங்காவை சீரமைப்பு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-குமார், திருவண்ணாமலை.


மழை பெய்யும்போதெல்லாம் தேங்கும் மழைநீர்

பேரணாம்பட்டு புத்துக்கோவில் பஸ் நிறுத்தம் பழைய பெட்ரோல் நிலையம் குடியாத்தம் செல்லும் சாலையில் சிறிது தாழ்வான பகுதியாக உள்ளது. பலத்த மழை பெய்யும்போதெல்லாம் அந்த இடத்தில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. தேங்கும் மழைநீரால் அந்த வழியாக செல்வோர் சிரமப்பட வேண்டி உள்ளது. தேங்கும் மழைநீர் வடிய ேவண்டும் என்றால் அங்குள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.


குடிநீர் தேக்க தொட்டிக்கு செல்லும் குழாய் உடைப்பு

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அசோக் நகர் பகுதியில் உள்ள ரத்தன்சந்த்நகர் குடிநீர் தேக்கத்தொட்டிக்கு செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி, தொட்டியைச் சுற்றிலும் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.

-சரவணன், சமூக ஆர்வலர், அரக்கோணம்.


மின் விளக்குகளை சீர் செய்வார்களா?

வேலூர் சத்துவாச்சாரியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒருசில மின்கம்பங்களில் மின் விளக்குகள் எரியாமல் வெகுநாட்களாக உள்ளன. இதனால் அந்தப் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி எரியாமல் இருக்கும் மின் விளக்குகளை சீர் செய்து எரிய விட வேண்டும்.

காளிதாஸ், வேலூர்.

பள்ளத்தை மூட வேண்டும்

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜிநகரில் உள்ள ரேஷன்கடை அருகே உள்ள சந்திப்பில் குடிநீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளம் பல நாட்கள் ஆகியும் மூடப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில் சாலையில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. மேலும் பள்ளம் மூடப்படாமல் உள்ளதால் இருசக்கர வாகனங்களை தவிர பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் காணப்படுகிறது. விரைவில் அந்த பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன், நேதாஜிநகர்.




Related Tags :
Next Story