தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்
வீணாகும் குடிநீர்
வேலூர் அருகே கருகம்புத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாகி கொண்டே இருக்கிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்ராஜ், வேலூர்.
தெரு மின்விளக்குகள் எரியவில்லை
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் 19-வது வார்டு பகுதியில் கடந்த 10 நாட்களாக தெரு மின் விளக்குகள் எரியவில்லை. அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. திருட்டுச் சம்பவங்கள் நடக்கிறது. இதுபற்றி நகராட்சி நிர்வாகம், வார்டு கவுன்சிலர் ஆகியோரிடம் தெரிவித்தோம் யாரும் கண்டு கொள்ளவில்லை. மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அப்துல், மேல்விஷாரம்.
திருப்பத்தூர் நகராட்சி 3-வது வார்டு சிவராஜ்பேட்டை புதிய காலனியில் உள்ள தெரு மின் விளக்குகள் ஒரு மாதமாக எரியவில்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. திருட்டுச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே எரியாத மின் விளக்கை எரியவிட வேண்டும்.
-அ.சு.பழனி, சிவராஜ்பேட்டை.
ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பூைனத்தாங்கல் ஊராட்சி சேனியநல்லூரில் உள்ள ஏரிக்கால்வாய்யை ஆக்கிரமித்து கோவில் மற்றும் வீடுகளை கட்டி உள்ளனர். இதனால் 30 ஏக்கர் விளைநிலம் தண்ணீரின்றி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வர வேண்டும்.
-ராஜா, பூைனத்தாங்கல்.
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி
கண்ணமங்கலத்தை அடுத்த வாழியூர் கூட்ரோடு பஸ் நிறுத்தத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டது. அங்கு ரோட்டின் குறுக்கே சிறு பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் அந்தப் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் வாழியூர் கூட்ரோடில் கிடப்பில் போட்டப்பட்ட சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-கார்த்திேகயன், கண்ணமங்கலம்.
தெரு, கால்வாய் சீரமைக்கப்படுமா?
வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு தெருவின் இடது பக்கம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. கால்வாய் சேதம் அடைந்துள்ளதால் தெருவில் அடிக்கடி கழிவுநீர் தேங்குகிறது. இதனால் மாணவிகள் பள்ளி செல்ல மிகுந்த சிரமம் அடைகின்றனர். தெருவை சீரமைத்து, கால்வாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்தாஸ், வேலூர்.
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் பஸ்கள்
வேலூர் பழைய பஸ் நிலையம் தற்போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில் சில பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள், பஸ்நிலையத்தில் இருந்து ஆற்காடு சாலைக்கு வரும் திருப்பத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு காத்து நிற்கின்றன. இதனால் பஸ் நிலையத்தின் உள்ளே நெரிசல் ஏற்பட முக்கிய காரணமாகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அப்துல் பாட்ஷா, வேலூர்.
பஸ்கள் நின்று செல்ல வேண்டும்
ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம்-திருத்தணி, திருப்பதி மார்க்கமாக செல்லும் பஸ்கள் அரக்கோணத்தை அடுத்த நாகாலம்மன் நகர் பஸ் நிறுத்தத்தில் நிற்பது இல்லை. இதுபோல் திருப்பதி, திருத்தணியில் இருந்து அரக்கோணம் வரும் பஸ்களும் அந்தப் பஸ் நிறுத்தத்தில் நிற்பது இல்லை. இதனால் அந்தப் பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்தப் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், நாகாலம்மன் நகர், அரக்கோணம்.