'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புழுதி பறக்கும் சாலை

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே கோவிலூரில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிக்காக திடீர்நகர் ஓடையில் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் முழுவதும் மண் பரவி கிடக்கிறது. வாகனங்கள் செல்லும் போது புழுதி பறப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே பாலத்தில் பரவி கிடக்கும் மண்ணை அகற்றிவிட்டு தார்சாலை அமைக்க வேண்டும்.

-சண்முகம், கோவிலூர்.

சாலை வசதி வேண்டும்

நத்தம் தாலுகா சாணார்பட்டி ஊராட்சி அஞ்சுகுளிபட்டி சூகன்பள்ளம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்துக்கு முறையான சாலை வசதி இல்லை. இதனால் மண் பாதை வழியாக தான் மக்கள் சென்று வருகின்றனர். அந்த பாதையும் சாரல் மழைக்குகூட தாக்குபிடிக்காமல் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே முறையான சாலை வசதி செய்து தரவேண்டும்.

-கார்த்திக், அஞ்சுகுளிபட்டி.

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

போடி நகராட்சி 13-வது வார்டு முனிசிபல் காலனியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் சீராக செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. அதோடு கொசுத்தொல்லையும் அதிகரித்து உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-முத்துக்குமார், போடி.

மண் குவியலால் இடையூறு

பழனி 30-வது வார்டு லால்பகதூர் சாஸ்திரி தெருவில் புதிதாக பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. இதற்காக பள்ளம் தோண்டிய மண்ணை சாலையில் குவித்து வைத்துள்ளனர். இதுவரை மண் குவியல் அகற்றப்படவில்லை. இதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. மண் குவியலை அகற்றுவார்களா?

-செந்தில்குமார், பழனி.

காட்டு யானைகள் அட்டகாசம்

கன்னிவாடியை அடுத்த தருமத்துப்பட்டி கோம்பை பகுதியில் காட்டு யானைகள் அதிகாலையில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை நாசம் செய்தன. இதுபோல் அடிக்கடி காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே காட்டு யானைகளின் தொல்லையை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வேந்திரன், தருமத்துப்பட்டி.

சாக்கடை கால்வாயில் குப்பைகள்

பெரியகுளத்தில் தென்கரை-தண்டுபாளையம் மெயின்ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாய் மூடி இல்லாமல் திறந்து கிடக்கிறது. இரவில் அந்த வழியாக செல்வோர் கால்வாயில் தடுமாறி விழுந்து விடுகின்றனர். மேலும் சிலர் குப்பைகளை சாக்கடை கால்வாய்க்குள் கொட்டுகின்றனர். எனவே சாக்கடை கால்வாய்க்கு மூடி அமைக்க வேண்டும்.

-மீனாட்சிசுந்தரம், பெரியகுளம்


Next Story