தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய தொகுப்பு.

ராணிப்பேட்டை



கோவில் குளம் சுத்தம் செய்யப்படுமா?

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு அருகில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் குளம் நீண்ட காலமாக சுத்தம் செய்யாமல் உள்ளது. அதில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. அதில் உள்ள நீர் மாசு அடைந்துள்ளது. குளத்தில் இருந்து விஷ பூச்சிகள், பாம்புகள் வெளியேறி பள்ளிகளுக்குள் வருவதால் மாணவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவில் குளத்தை சுத்தம் செய்து, கரையில் வேலி அமைக்க வேண்டும்.

-வசந்தி, பாணாவரம்.

ஆட்டோக்களால் ஆபத்து

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி பகுதியில் அளவுக்கு அதிகமாக ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றுகிறார்கள். அவ்வாறு ெசல்லும்போது காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் அடிக்கடி ஆட்டோக்களால் விபத்துகள் ஏற்படுகிறது. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

-அப்துல், தூசி.

குடியிருப்புகளை சுற்றி தேங்கும் கழிவுநீர்

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-3 வசந்தம்நகர் முதல் தெருவில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் கழிவுநீர், மழைநீர் அருகில் உள்ள தனியார் நிலம் வழியாக சென்று பெரிய கால்வாயில் கலந்தது. தனியார் நிலம் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவதால் கழிவுநீர் செல்லும் கால்வாய் அடைக்கப்பட்டது. இதனால் கழிவுநீர் குடியிருப்பை சுற்றி தேங்கி நிற்கிறது. அதை மாநகராட்சி ஊழியர்கள் வாரம் ஒருமுறை அப்புறப்படுத்தி சுத்தம் செய்து வருகிறார்கள். அவர்கள் சுத்தம் செய்த மறுநாளே மீண்டும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் செல்வதற்கு நிரந்தரமான கால்வாய் வசதி செய்து அமைத்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

-பாஸ்கரன், வேலூர்.

மின்கம்பத்தில் செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மின் கம்பத்தில் செடி, கொடிகள் வளர்ந்து கம்பத்தின் உச்சிவரை சென்றுள்ளது. கம்பத்தின் மேல் முனையில் பறவை கூடு கட்டி உள்ளது. மழை பெய்யும் நேரத்தில் அசம்பாவிதம் நடக்கும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-க.தாயுமானவன், பேரணாம்பட்டு.

கிடப்பில் போடப்பட்ட சாலை

சோளிங்கரை அடுத்த கல்பட்டு கிராமத்தில் 3 ஆண்டுக்கு முன்பு விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கும், மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டிச் செல்வதற்கும் ஏரிக்கரையில் ரூ.13 லட்சத்தில் 600 மீட்டர் தூரத்துக்கு ஜல்லிக்கற்களால் சாலை அமைத்து அப்படிேய கிடப்பில் போட்டு விட்டார்கள். அந்தச் சாலையை, தார் சாலையாக அமைப்பதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது புதர் மண்டி ஒத்தையடி பாதையாக காட்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகள், கால்நடைகளுக்கு பயன்படும் விதமாக இந்தச் சாலையைச் சீரமைத்துத் தர வேண்டும்.

-சுரேஷ்குமார், சோளிங்கர்.

போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் பந்தல்

ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் நகராட்சி சார்பில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடக்கிறது. அதற்காக பந்தல் அமைக்கப்படுகிறது. அந்தப் பந்தலை அகற்றாமல் விட்டு விடுவதால், அதில் சிலர் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள். இது, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. முகாம் முடிந்ததுமே நகராட்சி அதிகாரிகள் பந்தலை அகற்றுவார்களா?

-ராகவாலாரன்ஸ், ஆரணி.


Related Tags :
Next Story