தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் புகார்கள் பற்றிய தொகுப்பு.
பூட்டிய கதவு திறக்கப்படுமா?
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் இரண்டு வாயில்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. வயதானவர்கள். தற்போது மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தி வந்த பாதையை பூட்டு போட்டு பூட்டிவிட்டனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் அலுவலகத்திற்கு சென்றுவர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் வருவாய் துறை நிர்வாகம் பூட்டிய கதவை மீண்டும் திறந்துவிட வேண்டும்.
-சு.அகிலன், வங்காரம்.
ஆபத்தான நிலையில் மின்கம்பம்
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த மேல்வீராணம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைக்கு மிக அருகில், சிமெண்டு பூச்சுகள் முழுவதுமாக உதிர்ந்து லேசான மழை மற்றும் காற்று வீசினால் எந்த நேரத்திலும் உடைந்து விழும் ஆபத்தான நிலையில் மின் கம்பம் உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மூர்த்தி - மேல்வீராணம்.
பழுதான டி.வி. சரிசெய்யப்படுமா?
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் உள்ள டி.வி. கடந்த சில நாட்களாக வேலை செய்யாமல் பழுதாகி உள்ளது. இதனை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
-து.சஞ்சய்தரன், பெரியகம்மியம்பட்டு.
சுகாதார சீர்கேடு
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த சயனபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகள் என சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர். மாணவ- மாணவிகள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி மற்றும் கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் சுகாதாரமற்ற முறையில் உள்ளதால், மாணவ- மாணவிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கழிப்பறை மற்றும் குடிநீர்தொட்டியை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராஜேஷ், நெமிலி.
சாலையில் ஓடும் கழிவு நீர்
வேலூர் காகிதப்பட்டறையில் ஆற்காடு சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அங்கு துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் மற்றும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் செல்லும் கழிவு நீரை தடுக்க கால்வாயில் உள்ள அடைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், காகிதப்பட்டறை.
கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
கண்ணமங்கலம் பேரூராட்சி புதுப்பேட்டை புதுத்தெருவில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. எனவே புதுப்பேட்டை புதுத்தெரு பகுதியில் கட்டப்பட்டு வரும் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-சாந்தன், கண்ணமங்கலம்.
தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதியில் அனைத்து இடங்களிலும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்.சி.எஸ். சாலையில் உள்ள பள்ளி அருகில் ஒரு விளக்குக்கூட பொருத்தவில்லை. இதனால் இரவுநேரங்களில் இருள் சூழ்ந்து, நகை திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. எனவே இந்தப்பகுதியில் தெரு விளக்குகள் அமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-சம்பத், நாட்டறம்பள்ளி.
மின்சார வசதி செய்ய வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டம் கூத்தம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டி 3 ஆண்டுகளாகிறது. ஆனால் இதுவரை மின்சார வசதி செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மின் விசிறி பயன்படுத்த முடியாதநிலை உள்ளது. எனவே உடனடியாக பள்ளிக்கு மின்சார வசதி செய்ய வேண்டும்.
-சுதாகர், கூத்தம்பாக்கம்.
தினத்தந்திக்கு நன்றி
ஆரணி கொசப்பாளையம் பெரியசாயக்கார தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடும் அவல நிலை குறித்து தினத்தந்தி புகார்பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில், தூய்மை பணியாளர்களைக் கொண்டு தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.
-குமார், ஆரணி.