'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக மரைக்கா கோரையாற்றில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மரைக்கா கோரையாற்றில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக மரைக்கா கோரையாற்றில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விவசாயிகள் நிறைந்த பகுதி
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். மேட்டூர் அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் இந்த பகுதியின் முக்கிய வாழ்வாதாரமாகும்.
பருவநிலை மாற்றங்களால் இந்த பகுதியில் விவசாயம் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆர்வத்துடன் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்தனர்.
ஆற்றில் ஆகாயத்தாமரைகள்
இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களில் ஆகாயத்தாமரைகள் மண்டி உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் வேகமாக வடிந்து செல்வதில் சிரமம் உள்ளது. தண்ணீர் வடிய வழியின்றி வயல்களுக்குள் புகுந்து பயிர்கள் அழுகி நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். திருத்துறைப்பூண்டி, எழிலூர், நேமம், மாங்குடி, மருதவனம், மடப்புரம், பள்ளங்கோவில், கடியாச்சேரி, மேட்டுப்பாளையம், கொத்தமங்கலம், நுணாகாடு உள்ளிட்ட கிராமங்களுக்கான முக்கிய வடிகாலாக திருத்துறைப்பூண்டி மரைக்காகோரையாறு உள்ளது. இந்த ஆறு முழுவதும் ஆகாயத்தாமரைகள் மண்டி உள்ளன.
'தினத்தந்தி' செய்தி எதிரொலி
இதுதொடர்பான செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக திருத்துறைப்பூண்டி நகரசபை தலைவர் கவிதாபாண்டியன், நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் ஆகியோரின் உத்தரவின் பேரில் நகரசபை நியமனக்குழு உறுப்பினர் பாண்டியன், நகரசபை துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், நகரசபை உறுப்பினர் வசந்த் ஆகியோர் மேற்பார்வையில் மரைக்கா கோரையாற்றில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நகரசபை தலைவர் மற்றும் நிர்வாகத்துக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.