'தினத்தந்தி' செய்தி எதிரொலி:அறச்சலூர்-வெள்ளோடு சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக: அறச்சலூர்-வெள்ளோடு சாலை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக அறச்சலூர்- வெள்ளோடு சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
பழுதடைந்த சாலை
அறச்சலூர் முதல் வெள்ளோடு செல்லும் ரோடு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கி நடந்து வந்தது. அதில் அனுமன்பள்ளி வரை 3 மாதங்களுக்கு முன்புதான் ரோடு புதிதாக போடப்பட்டது. இந்த ரோடு தரமாக இல்லாததால் போடப்பட்ட சில வாரங்களிலேயே பெயர்ந்தது. பல்வேறு இடங்களில் சாலை பெயர்ந்து குண்டும்- குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கினார்கள்.
எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுபற்றிய செய்தி நேற்று 'தினத்தந்தி'யில் பொதுமக்கள் பேட்டியுடன் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரோட்டை ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்கும் பணியை தொடங்கினார்கள்.
புதிதாக சாலை
இதன்படி அனுமன்பள்ளி இந்திரா நகர் பகுதியில் நேற்று பழுதடைந்த நிலையில் இருந்த ரோட்டை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் பழுதடைந்த தார்சாலை பெயர்த்து எடுக்கப்பட்டு அங்கு மீண்டும் புதிதாக சாலை அமைக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'மழை பெய்ததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. விரைவாக சாலை முழுவதும் சீரமைக்கப்படும். வேப்பங்காட்டுபுதூர், சீனிவாசபுரம் பகுதிகளில் அடுத்த கட்டமாக பணிகள் நடைபெறும்' என்றனர்.
நன்றி
இது குறித்து அனுமன்பள்ளியை சேர்ந்த எம்.செல்வராஜ் கூறியதாவது:-
நாங்கள் அடிக்கடி பயணம் செய்யும் முக்கிய ரோடான அறச்சலூர்- வெள்ளோடு ரோட்டில் சாலை பழுதடைந்து வாகன ஓட்டிகள், குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் திணறினார்கள். இதுபற்றிய எங்கள் கோரிக்கை 'தினத்தந்தி'யில் செய்தியாக வெளியிடப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளித்து உள்ளது. எங்கள் குறையை எடுத்துக்கூறிய 'தினத்தந்தி'க்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.