'தினத்தந்தி' செய்தி எதிரொலி:பாகற்காய் பயிர்களை தாக்கும் அடி சாம்பல் நோய் குறித்து அதிகாரிகள் ஆய்வு-கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து அறிவிப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் பாகற்காய் பயிர்களை அடி சாம்பல் நோய் தாக்குவது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர், மேலும் அதை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அறிவித்துள்ளனர்.
கூடலூர்
'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் பாகற்காய் பயிர்களை அடி சாம்பல் நோய் தாக்குவது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர், மேலும் அதை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அறிவித்துள்ளனர்.
அடி சாம்பல் நோய் தாக்குதல்
கூடலூர் தாலுகாவில் பாடந்தொரை, மண்வயல், செறுமுள்ளி, ஸ்ரீமதுரை, புத்தூர்வயல் மற்றும் புளியம்பாறை போன்ற கிராமங்களில் நவம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிய பரவலாக பாகற்காய் விவசாயம் நடைபெற்று வருகின்றது. தற்போது பாகற்காய் செடிகளை அடி சாம்பல் நோய் தாக்குவதாக விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இது தொடர்பாக 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக கூடலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி தலைமையிலான அலுவலர்கள் பாடந்தொரை மற்றும் மண்வயல் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது நிலவும் தட்பவெட்ப சூழ்நிலையால் பாகற்காய் செடிகளின் இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது. பின்னர் அது வாடி கருகி விடுகின்றது. சில இடங்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளும் காணப்பட்டது. பாகற்காய் இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறுவதற்கு சாறு உறிஞ்சும் பூச்சிகளும் ஒரு காரணம் என தெரியவந்தது.
நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- தோட்டக்கலைத்துறையின் மூலம் 3ஜி கரைசல் பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கு தேவையான பொருட்கள் 1 கிலோ இஞ்சி, 1 கிலோ பூண்டு, 1 கிலோ பச்சை மிளகாய் மற்றும் மாட்டு கோமியம் தேவையை பொறுத்து அளவு மாறுப்படும். இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் துண்டு துண்டாக வெட்டியோ அல்லது அரைத்து மாட்டு கோமியத்துடன் கலக்கி 10 அல்லது 15 நாட்கள் வைத்திருந்து கரைசலை வடிகட்டி எடுத்து 1 டேங்கிற்கு 250 மில்லி லிட்டர் வீதம் தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதலிருந்து கட்டுப்படுத்த முடியும்.
மேலும் வாடல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உயிரியல் கட்டுப்படுத்தும் காரணியான பேசிலஸ் சப்டிலிஸ் மற்றம் டிரைக்கோடெர்மா விரிடி நுண்ணுயிர் மருந்தினை மாதம் ஒரு முறை 2 முதல் 5 கிராம், 1 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் செடியின் வேர்பகுதியில் ஊற்றுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.