'தினத்தந்தி' செய்தி எதிரொலி:குளத்தில் கொட்டப்பட்ட கோழி கழிவுகள் அகற்றம்
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக, கூடலூரில் உள்ள ஒட்டாண்குளத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டது.
கூடலூர் நகரின் மையப்பகுதியில் மைத்தலை மண்ணடியான் என்று அழைக்கப்படும் ஒட்டாண்குளம் அமைந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைரவன் வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு இந்த குளத்தில் தேக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம் அப்பகுதியில் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் இந்த குளத்தில் உள்ள தண்ணீர் கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த குளத்தின் கரையோர பகுதியில் சிலர் கோழி இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக குளத்தில் நீர் மாசுபட்டு வருகிறது. இந்த தண்ணீரை கால்நடைகள் குடிக்கும் போது நோய் தொற்று ஏற்படுகிறது. மேலும் இறைச்சிக்கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஒட்டாண்குளம் கரை பகுதியில் கோழி இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நேற்று கூடலூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் தலைமையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஒட்டாண்குளக்கரையில் கொட்டப்பட்டுள்ள கோழி இறைச்சி கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குளத்து கரைகளில் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.