பொய்கை வாரச்சந்தையில் கறவை மாடுகள் விற்பனை விறுவிறுப்பு
பொய்கை வாரச்சந்தையில் கறவை மாடுகள் விற்பனை விறுவிறுப்பு, ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொய்கை ஊராட்சியில் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் ஈட்டித்தருவது பொய்கை மாட்டுசந்தை, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடக்கும் இந்த சந்தையில் உள்ளூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலகளிலிருந்தும் ஏராளமான கறவை மாடுகள், காளைகள் ஆடுகள், கோழிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால் இங்கு சாதாரணமாக வாரத்திற்கு ரூ. 2 கோடி முதல் ரூ.3 கோடி வரை கால்நடை விற்பனை மட்டுமின்றி கால்நடை தொடர்பான பொருட்கள் காய்கறிகள் என ஒட்டு மொத்தமாக விற்பனை நடைபெறும்.
இந்த நிலையில் நேற்று காலை தொடங்கிய மாட்டுச்சந்தையில்1500 கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு வர்த்தகம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இது குறித்து பொய்கை வாரச் சந்தை நடத்தும் ஏலதாரர்களில் ஒருவரான பி.வெங்கடேசனிடம் கேட்டதற்கு, ''இந்த வாரம் கால்நடைகளின் வரத்து அதிகமாகவே இருந்தன.
விற்பனைக்காக கொண்டு வரப்படும் விவசாயகளிடத்தில் சந்தையில் வியாபாரம் நடத்துவதற்காக அவர்களிடம் சுங்க வரி வசூல் செய்வோம் வாரத்திற்கு ஒரு லட்சம் முதல் 1.30 லட்சம் வரை வசூல் ஆகும் ஆனால் இந்த வாரம் ரூ.2 லட்சம் வரை சுங்க வரி வசூல் ஆனது. மேலும் ரூ.2 கோடிக்குமேல் வியாபாரம் நடந்திருக்கலாம்'' என்றார்.