நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை: பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது-கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை: பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது-கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை காரணமாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பஞ்சப்பள்ளி சின்னாறு அணை

பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளியில் சின்னாறு அணை உள்ளது. இதன் மொத்த உயரம் 50 அடி ஆகும். இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இந்தநிலையில் நேற்று பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் வினாடிக்கு 4 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் அப்படியே உபரிநீராக அணையில் இருந்து திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

மேலும் மாரண்டஅள்ளி வழியாக செல்லும் சனத்குமார் நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சின்னாறு மற்றும் சனத்குமார் நதியை ஒட்டியுள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் ஆறுகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கரையோர பகுதிகளுக்கு மேச்சலுக்கு அனுப்ப கூடாது என்றும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அணை நிலவரம்

அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பஞ்சப்பள்ளி, சாமனூர், மாரண்டஅள்ளி, அத்திமுட்லு, பாலக்கோடு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 4 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 50 அடி உயரம் கொண்ட பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் தற்போது 49.53 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பஞ்சப்பள்ளி சின்னாறு அணை இந்த ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story