கல்லாற்றில் பாசன பகுதிகளுக்கு நீர்வரத்து பாதிப்பு: புதர்களின் ஆக்கிரமிப்பில் பொதியம்பள்ளம் அணை-தூர்வாரி சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
மொரப்பூர்:
கல்லாற்றில் பொதியம்பள்ளம் அணை புதர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கி இருப்பதால் பாசன பகுதிகளுக்கு நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள புதர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
பொதியம்பள்ளம் அணை
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ஓபிளிநாயக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோம்பை கிராமத்தில் பொதியம்பள்ளம் அணை அமைந்துள்ளது. செம்மணஅள்ளி அருகே உள்ள மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் மற்றும் வத்தல் மலையின் கிழக்கு பகுதியில் இருந்து வரும் மழை நீர் கல்லாறாக உருவெடுத்து, இந்த அணைக்கு வருகிறது. இந்த அணையில் தேங்கும் மழைநீர் கால்வாய்கள் மூலமாக பல்வேறு ஊர்களில் உள்ள ஏரிகளுக்கு செல்கிறது.
இதன் மூலமாக கடத்தூர், மடதஅள்ளி, தாளநத்தம், வே.புதூர் போசிநாயக்கனஅள்ளி, லிங்கநாயக்கனஅள்ளி, தொங்கனூர், அஷ்டகிரியூர், வெள்ளியங்கிரி, புதுரெட்டியூர், கொடக்காரஅள்ளி, வீரகவுண்டனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 16-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது வழக்கம். மழைக்காலங்களில் இந்த ஏரிகளுக்கு தண்ணீர் வரும்போது 25 கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன் மூலம் இந்த பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்படுகிறது.
நீர்வரத்து பாதிப்பு
பொதியம்பள்ளம் அணையில் கடந்த 2003-ம் ஆண்டு விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் சமீப காலமாக இந்த அணையில் தண்ணீர் தேங்கும் பகுதி மற்றும் கல்லாறு ஓடும் பகுதி ஆகியவற்றில் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. கால்வாயில் ஒரு பகுதி முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் தொடர்ந்து கல்லாற்றில் சீராக ஓட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள் தேவையான அளவில் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் அணை மூலம் பாசன வசதி பெறும் ஏரிகளுக்கும் நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள்வருமாறு:-
தூர்வாரி சீரமைக்க வேண்டும்
முத்தானூரை சேர்ந்த விவசாயி வடிவேல்:
கல்லாற்றில் கட்டப்பட்டுள்ள பொதியம்பள்ளம் அணையில் மழைநீர் தேங்கும் போது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கிடைக்கும். இதனால் பல்வேறு கிராமங்களில் விவசாய பணிகளுக்கு தேவையான நீராதாரம் கிடைத்து வந்தது. இந்தநிலையில் இந்த அணையில் மழைநீர் தேங்கும் பகுதியிலும், இடதுபுற கால்வாயிலும் அதிக அளவில் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்து விட்டன. இதனால் மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகரித்தாலும் கால்வாய் மூலம் தண்ணீர் சீராக வெளியேற முடியவில்லை. எனவே இந்த கால்வாயை ஆக்கிரமித்துள்ள முட்செடிகள் புதர்களை அகற்றி, கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும். அணையில் இருந்து கால்வாய்கள் மற்றும் கல்லாற்றில் தண்ணீர் சீராக செல்வதை உறுதி செய்ய அதிகாரிகள் உரிய கண்காணிப்பு பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
தண்ணீர் தேங்கும் பரப்பு குறைந்தது
பொதியம்பள்ளத்தை சேர்ந்த கமலா:
மழைக்காலங்களில் கல்லாற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பொதியம்பள்ளம் அணையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும். இதன் மூலம் பாசன பகுதிகளுக்கு அதிக தண்ணீர் கிடைக்கும். இதனால் நெல், கரும்பு, பூக்கள், காய்கறிகள் சாகுபடி பரப்பு அதிகரிக்கும். இப்போது இந்த அணை மற்றும் கால்வாயில் புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் தண்ணீர் தேங்கும் பரப்பு கணிசமாக குறைந்துள்ளது. மேலும் கால்வாய்களில் தண்ணீர் சீராக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதர்களின் ஆக்கிரமிப்பால் சிக்கி தவிக்கும் பொதியம்பள்ளம் அணை மற்றும் கால்வாயை சீரமைக்க வேண்டும். இந்த அணை அருகே வசித்து வருபவர்கள் கால்வாயை எளிதாக கடக்க கூடுதல் பாலங்களை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.