விருத்தாசலம் அருகே மணிமுக்தாற்றில் ரூ.15 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை சேதம் உடனடியாக சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை


விருத்தாசலம் அருகே  மணிமுக்தாற்றில் ரூ.15 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை சேதம்  உடனடியாக சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
x

விருத்தாசலம் அருகே மணிமுக்தாற்றில் ரூ.15 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்துள்ளது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர்


விருத்தாசலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து வரும் மணிமுக்தாறு கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், கம்மாபுரம் வழியாக சென்று சேத்தியாத்தோப்பு அடுத்த கூடலையாற்றூர் அருகே வெள்ளாற்றில் கலந்து வருகிறது.

இந்த ஆறு மூலம் ஏராளமான ஏரிகள் தண்ணீர் பெற்று, அதன் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். மேலும் பருவமழை காலங்களில் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை சேமிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது.

தடுப்பணையில் சேதம்

அந்த வகையில் விருத்தாசலம் அருகே பரவலூர் கிராமத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மணிமுத்தாற்றின் குறுக்கே ரூ.15 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, இந்த தடுப்பணை சேதத்துக்கு உள்ளானது.

அதாவது தடுப்பணையையொட்டி கரை பகுதியில் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தது. அதில் சில கற்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் மீதுமுள்ள கற்கள் சரிந்து விழுந்து கிடக்கிறது. மேலும் தடுப்பணையின் முன்பு மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்க அமைக்கப்பட்டு இருந்த சிமெண்டு தடுப்புகளும் தண்ணீரில் அடித்து செல்லப்படுள்ளது.

இதனால் எதிர்வரும் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தடுப்பணையையொட்டிய பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு , தடுப்பணைக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

சீரமைக்க கோரிக்கை

இதுபற்றி அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், தடுப்பணை சேதம் குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்வரும் பருவமழையை கருத்தில் கொண்டு உடனடியாக சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் ரூ.15 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story