மூலவைகை ஆற்றில் உறைக்கிணறு சேதம்


மூலவைகை ஆற்றில் உறைக்கிணறு சேதம்
x
தினத்தந்தி 29 Jun 2023 1:15 AM IST (Updated: 29 Jun 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே சேதமடைந்த உறைக்கிணற்றில் இருந்து சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்வதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

தேனி

உறைக்கிணறு சேதம்

வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட வாலிப்பாறை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்திற்கு மூலவைகை ஆற்றில் உறைக்கிணறு அமைத்து அதில் இருந்து நீர் உறிஞ்சப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் உறைக்கிணறு சேதமடைந்தது. இதனால் ஆற்றில் வரும் நீர் நேரடியாக கிணற்றுக்குள் தேங்கியது.

சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்

மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் ஆற்று நீரில் அடித்து வரப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளும் உறைக்கிணற்றுக்குள் சென்றது. இதனால் குப்பை கழிவுகள் அனைத்தும் உறைக்கிணற்றின் கீழ் பகுதியில் தேங்கி விடுவதால் தண்ணீர் மாசு அடைந்துள்ளது.

இந்நிலையில் மழை இல்லாததால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூலவைகை ஆறு வறண்டது. தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் உறைக்கிணற்றில் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வருசநாடு பகுதியில் வினியோகம் செய்யும் குடிநீர் குப்பை கழிவுகள் கலந்து சுகாதாரமற்றதாக உள்ளது.

இந்த நீரை பிடித்து பயன்படுத்தும் பொதுமக்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள பொதுமக்கள் சிலர் வேறு கிராமங்களுக்கு சென்று குடிநீர் கொண்டு வருகின்றனர். எனவே சுகாதாரமான குடிநீரை வினியோகம் செய்வதற்கு சேதம் அடைந்த உறைக்கிணற்றை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story