குடிநீர் திட்டப்பணிகளை மேற்கொள்ள கிருஷ்ணகிரி அணையின் நீர்இருப்பை 43 அடியாக குறைக்க முடிவு-அதிகாரி தகவல்


குடிநீர் திட்டப்பணிகளை மேற்கொள்ள கிருஷ்ணகிரி அணையின் நீர்இருப்பை 43 அடியாக குறைக்க முடிவு-அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

குடிநீர் திட்டப்பணிகளுக்காக, கிருஷ்ணகிரி அணை நீர்இருப்பை 43 அடியாக குறைக்கப்பட உள்ளதாகவும், பாசனத்திற்கு தண்ணீர் தடையின்றி கிடைக்கும் என கிருஷ்ணகிரி அணை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

குடிநீர் திட்டம்

வேப்பனப்பள்ளி ஒன்றியம் 15 ஊராட்சிகள், எண்ணேக்கொள்புதூர் மற்றும் 122 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஆண்டு பராமரிப்பு செலவிற்காக ரூ.79 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறைந்தபட்ச தேவை நிதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இத்திட்டத்தின் கீழ் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் தவளம் கிராமம் அருகே 6 நீர் உறிஞ்சுகிணறுகள் அமைக்கப்படஉள்ளது. இதில், 5 நீர் உறிஞ்சு கிணறுகள் ஆற்றின் தரைமட்ட அளவு வரை முடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் தரை மட்டத்திற்கு மேல் 3½ மீட்டர் உயரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிலுவையில் உள்ளன. இந்த கிணறுகள் அமைக்கும் பணிகளுக்காக, அணையின் நீர்மட்டத்தை 43 அடியாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் கடிதம் அளித்துள்ளனர்.

நீர்இருப்பை குறைக்க அறிவுரை

இதுதொடர்பாக கலெக்டர் நீர்வளத்துறை அலுவலர்களுடன் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், நீர்இருப்பை குறைக்க அறிவுறுத்தி உள்ளார். இதனால் கிருஷ்ணகிரி அணையின் கீழ் முதல்போக பாசனத்திற்கும், குடிநீருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது திறக்கப்பட உள்ள வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரில் 200 கனஅடி நீர் பாசனத்திற்கும், மீதமுள்ள தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்படும். இந்த தண்ணீர் அணையின் கீழ் உள்ள பாரூர் முறைபாசனம் (42 ஏரிகளுக்கும்), ராமாபுரம், தளிஹள்ளி நேரடி பாசன கால்வாய் வழியாகவும் செல்லும். அதில் மீதமுள்ள தண்ணீர் ஈச்சம்பாடி அணைக்கு சென்றடையும்.

9 நாட்கள் திறக்கப்படும்

மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பணிகள் முடிந்த பிறகு, கெலவரப்பள்ளி அணையில் இருந்து கதவுகள் புனரமைப்பு பணிக்காக திறந்துவிடப்படும் தண்ணீரை கிருஷ்ணகிரி அணையில் தேக்கி வைத்துக்கொள்ளலாம்.

எனவே குடிநீர் பணிக்காக கிருஷ்ணகிரி அணையில் இருந்து 43 அடிக்கு தண்ணீரை குறைக்க அரசாணை பெறப்படும் நாளில் இருந்து 9 நாட்களுக்குள் திறந்து விடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

52 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நேற்றைய நீர்மட்டம் 48.60 அடியாகஉள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story