அய்யம்பாளையம் மருதாநதி அணையின் நீர்மட்டம் 54 அடியாக உயர்வு
அய்யம்பாளையம் மருதாநதி அணையின் நீர்மட்டம் 54 அடியாக உயர்ந்தது.
பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் 72 அடி உயரம் கொண்ட மருதாநதி அணை உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதற்கிடையே அவ்வப்போது பெய்த கோடை மழை மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டுவிட்டு பெய்யும் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மருதாநதி அணையின் நீர்மட்டம் 54 அடியாக உயர்ந்தது. தற்போது அணைக்கு வினாடிக்கு 15 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 10 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நீர்வரத்தை பொறுத்து இந்த மாத இறுதியில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்பட்சத்தில் அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகள் மற்றும் சித்தரேவு, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.