மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுமா?
நீர்வரத்து குறைந்து உள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி;
நீர்வரத்து குறைந்து உள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
மேட்டூர் அணை திறப்பு
காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயத்துக்காக கடந்த ஆண்டு இதே நாளில்(மே 24-ந் தேதி) மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மேட்டூர் அணையிலிருந்து மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது.மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஆண்டு மே 24-ந் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையை அடைந்து கல்லணையில் இருந்து மே 27-ந் தேதி தண்ணீர் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு திறந்து விடப்பட்டு, குறுவை சாகுபடி உற்சாகமாக நடைபெற்றது.
கொள்முதல்
இதனால் முந்தைய இலக்குகளை விட அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி நடந்தது. விளைச்சலும் நல்ல நிலையில் இருந்தது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முந்தைய காலங்களை விட அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைத்தது. கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் 117.26 அடியாகவும், நீர் இருப்பு 89.198 டி.எம்.சி. ஆகவும் இருந்தது.அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக இருந்தது. பருவமழை நல்ல நிலையில் இருக்கும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்ததை ெதாடர்ந்து தமிழக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னதாக தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவித்தார்.
தென்மேற்கு பருவமழை
தற்போது மேட்டூர் அணையில் நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 103.58 அடியாகவும் நீர் இருப்பு 69.560 டி.எம். சி.யாகவும் உள்ளது. நீர்வரத்து மிகவும் குறைவான நிலையில் உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை தெளிவாக வெளியிடப்படவில்லை.இருப்பினும் பெங்களூரு நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவம் தவறி பெருமழை பெய்தது. இதைப்போல நடப்பாண்டிலும் மேட்டூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று காத்திருக்கின்றனர்.
தூர்வாரும் பணிகள்
இதுதவிர கால்வாய்கள் தூர்வாரும் பணி, ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் கல்லணை கால்வாயில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள், கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நடப்பு ஆண்டில் குறிப்பிட்ட ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் என்று விவசாயிகள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.