குளத்தின் வடிகால்கள் சேதம்
குளத்தின் வடிகால்கள் சேதம் அடைந்தன.
நாகை அருகே நாகூர் அமிர்தா நகர் சுனாமி குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பயன்பாடற்ற நிலையில் இருந்த சலவை குளத்தை ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி புனரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கின. அதனை தொடர்ந்து குளத்தில் தூர்வாரும் பணிகள், கம்பியினால் சுற்றுவேலி அமைத்தல், குளத்தை சுற்றி நடைபாதை அமைத்தல், வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தன. தற்போது வர்ணம் பூசும் பணி நடக்கிறது. இந்த நிலையில் நாகூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 1 மணி நேரம் கனமழை பெய்தது. இந்த நிலையில் அங்கு உள்ள வடிகால்கள் சேதம் அடைந்துள்ளன. குளத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள சிறிய வடிகால்களையொட்டி மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகள் முடிந்த சில மாதங்களிலேயே குளத்தின் நடைபாதை உள்வாங்கி, வடிகால் சேதம் அடைந்து இருப்பது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.