சேதமடைந்த வாய்க்கால் மதகை புதிதாக கட்ட வேண்டும்
சீதக்கமங்கலம் ஊராட்சியில் சேதமடைந்த வாய்க்கால் மதகை புதிதாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குடவாசல்;
சீதக்கமங்கலம் ஊராட்சியில் சேதமடைந்த வாய்க்கால் மதகை புதிதாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேதமடைந்த வாய்க்கால் மதகு
திருவாரூா் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் சீதக்கமங்கலம் ஊராட்சியை சேர்ந்த மேலப்பிடாகை கிராமத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலும் இக்கிராமத்தில் பிரசித்தி பெற்ற சக்தி தலமான வேலூர் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வாகனத்தில் வந்து செல்கிறார்கள்.இந்த கிராமத்துக்கு செல்லும் வழியில் விக்கிரபாண்டியம் வடிகால் வாய்க்கால் முடிகொண்டான் ஆற்றில் வந்து கலக்கிறது. இந்த வாய்க்காலில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வாய்க்கால் மதகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து கிராமத்திற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது.
புதிதாக கட்டித்தர கோரிக்கை
மேலும் இங்கு உள்ள மகா மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ½ கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே வாகனங்களை நிறுத்திவிட்டு ஆலயத்துக்குச் செல்லும் நிலை உள்ளது. எனவே கிராம மக்கள் இந்த மதகை புதிதாக கட்டித் தர வேண்டி பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும், இதுவரை இந்த மதகு கட்டித் தரப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவில் சேதமடைந்த வாய்க்கால் மதகை புதிதாக கட்டித்தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.