சேதமடைந்த நடைபாலம் சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த நடைபாலம் சீரமைக்கப்படுமா?
x

வடபாதிமங்கலத்தில் சேதமடைந்த பாலம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிா்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

வடபாதிமங்கலத்தில் சேதமடைந்த பாலம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிா்பார்த்து உள்ளனர்.

நடைபாலம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடபாதிமங்கலத்தில், கிளியனூர் மாதாகோவில் கோம்பூர் தெரு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மக்களின் பயன்பாட்டுக்காக வெண்ணாற்றின் குறுக்கே நடைபாலம் கட்டப்பட்டது. இந்த நடைபாலத்தை கிளியனூர் மாதாகோவில் தெரு, புனவாசல், எள்ளுக்கொல்லை காலனி தெரு, பழையனூர், அழகியநாதன்கோம்பூ, காக்கையாடி, சாத்தனூர், உச்சுவாடி, நாகங்குடி, வேற்குடி மற்றும் அதை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மரக்கட்டைகள்

மேலும், அருகில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடைபாலத்தில் அமைக்கப்பட்ட சிமெண்டு தளங்கள் சில கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து ஆற்றுக்குள் விழுந்து விட்டது. இதனால், பாலத்தின் முகப்பு பகுதியில் சிமெண்டு தளங்கள் இடிந்து விழுந்த பகுதியில் மரக்கட்டைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது மக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வந்தாலும், பெரும்பாலான மக்கள் சேதமடைந்த பாலத்தை கடந்து சென்று வர முடியாமல் நீண்ட தூரம் சுற்றி அலைந்து திரிகிறார்கள்.

சீரமைக்க கோரிக்கை

குறிப்பாக கடைவீதி, அரசு ஆஸ்பத்திரி மற்றும் பிற இடங்களுக்கு சென்று வருவதற்குள் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள். இதற்கிடையே அடுத்தடுத்து சிமெண்டு தளங்களில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால், மேலும் சிமெண்டு தளங்கள் இடிந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

சிமெண்டு தளங்கள்

வடபாதிமங்கலத்தை சேர்ந்த பீட்டர்:-

கிளியனூர் மாதாகோவில் தெரு கிராம மக்கள் சென்று வருவதற்கு வசதியாக சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைபாலம் வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இந்த பாலம் பழமையான பாலம் என்பதால் தற்போது அதன் பலம் குறைந்து காணப்படுகிறது. நடைபாதையில் சென்று வருவதற்காக சிமெண்டு தளங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படி அமைக்கப்பட்டது. தற்போது அந்த சிமெண்டு தளங்கள் பலம் இழந்து ஒன்றன் பின் ஒன்றாக சரிந்து விழுந்து விட்டது. இதுவரை 7- க்கும் மேற்பட்ட சிமெண்டு தளங்கள் சரிந்து விழுந்து விட்டன. சிமெண்டு தளங்கள் இடிந்து விழுந்த இட த்தில் தற்காலிகமாக மரக்கட்டையை அடுக்கி வைத்து கட்டப்பட்டது.இருப்பினும் மரக்கட்டையை அடுக்கி வைத்துள்ள இடத்தில் கால் வைத்து நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சேதமடைந்த சிமெண்டு தளங்கள் முழுவதையும் அகற்றி விட்டு தரமான சிமெண்டு தளங்கள் கொண்டு அமைத்து தர வேண்டும்.

குக்கிராம மக்கள்

கூத்தாநல்லூர் ஸ்டாலின்:- இந்த பாலத்தை குக்கிராமங்களில் உள்ள மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, அங்கன்வாடி குழந்தைகள், மற்றும் பள்ளி மாணவர்கள், சாத்தனூர் அரசு மருத்துவமனை மற்றும் கால்நடை மருத்துவமனை சென்று வருவோர் அதிக அளவில் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சிமெண்டு தளங்கள் சேதமடைந்து விழுந்து விட்டதால் பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய பாலம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினா்.


Next Story