சேதமடைந்த வடிகால் வாய்க்கால் பாலம்


சேதமடைந்த வடிகால் வாய்க்கால் பாலம்
x

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த வடிகால் வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த வடிகால் வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிறிய பாலம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, பனங்காட்டாங்குடி என்ற இடத்தில் அன்னமரசனார் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வடிகால் வாய்க்கால் குறுக்கே அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு சிறிய அளவிலான பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தையொட்டி மயான கொட்டகை உள்ளதால், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு, இந்த பாலத்தை கடந்துதான் மயான கொட்டகைக்கு செல்ல வேண்டும்.மேலும், விவசாய பணிகளை மேற்கொள்வதற்கும் விவசாய உபகரணங்களை கொண்டு செல்வதற்கும், பனங்காட்டாங்குடி, நீர்மங்கலம், வேளுக்குடி, சித்தனங்குடி, பூதமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் இந்த பாலம் வழியாக சென்று வருகிறார்கள்.

விரிசல்கள்

குறிப்பாக, இரவு நேரங்களில் வயல்களில் தண்ணீர் தேக்கவும், தேவையற்ற தண்ணீரை வெளியேற்றுவதற்கும் இந்த பாலத்தை கடந்துதான் விவசாயிகள் சென்று வருகின்றனர். இந்த பால கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக, பாலத்தின் இரண்டு பக்கமும் உள்ள தடுப்பு சுவரில் விரிசல்கள் ஏற்பட்டும், சில இடங்களில் இடிந்தும் காணப்படுகிறது. மேலும், பாலத்தின் நடைதளத்திலும் சிறு சிறு விரிசல்கள் காணப்படுகிறது.பாலத்தில் ஏற்பட்ட விரிசல்கள் காரணமாகவும், மழை காலங்களில் பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீராலும் பாலம் இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது. பாலம் முழுமையாக சேதமடைந்து இடிந்து விழுவதை தவிர்க்க விரைவில் பாலத்தில் சீரமைப்பு பணிகளை செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story