தண்ணீர் வடிந்த உடன் பயிர் சேத விவரங்கள் கணக்கெடுக்கப்படும்
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தண்ணீர் வடிந்த உடன் பயிர் சேத விவரங்கள் கணக்கெடுக்கப்படும் என்று தோட்டக்கலை துணை இயக்குனர் கூறினார்.
பாபநாசம்;
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தண்ணீர் வடிந்த உடன் பயிர் சேத விவரங்கள் கணக்கெடுக்கப்படும் என்று தோட்டக்கலை துணை இயக்குனர் கூறினார்.
வெள்ளப்பெருக்கு
கர்நாடக மாநிலத்தில் தொடர் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் கல்லணை வந்து அங்கிருந்து கொள்ளிடம் காவிரி ஆறுகளில் திறந்து விடப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக தோட்டக்கலை பயிர்களான வாழை, மிளகாய், வெண்டை செண்டி பூக்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டு உள்ளன.
ஆய்வு
இந்தநிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோவிந்தநாட்டுசேரி ஊராட்சியில் பட்டுக்குடி, கூடலூர், புத்தூர் மற்றும் உள்ளிக்கடை கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள வாழை, மிளகாய் பயிர்களை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நீரில் மூழ்கிய பயிர்களின் விவரங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்தார். பின்னர்அவர் நிருபர்களிடம் கூறியதாவதுவெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் பயிர்களை சூழ்ந்துள்ள வெள்ளம் வடிந்து விடும். அதன் பிறகு தோட்டக்கலை பயிர்களின் சேத விவரங்கள் கணக்கெடுக்கப்படும். இதை அறிக்கையாக தயார் செய்து மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கப்படும்.
இழப்பீடு
பின்னர் சேத விவரங்கள் கலெக்டர் மூலம் சென்னையில் உள்ள தோட்டக்கலை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது பாபநாசம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பரிமேழகன், பாபநாசம் தோட்டக்கலை அலுவலர் தேவதர்ஷினி, பாபநாசம் உதவி தோட்டக்கலை துறை அலுவலர்கள், கோவிந்தநாட்டுசேரி ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், ஒன்றிய கவுன்சிலர் சுமதி இளங்கோவன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.