விபத்து ஏற்படுத்தும் மின்கம்பங்கள்
விபத்து ஏற்படுத்தும் மின்கம்பங்கள்
திருப்பூர்
மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக தற்போது மின்சாரம் இருக்கிறது. சிறிய வேலைகள் முதல் பெரிய வேலைகள் வரை செய்வதற்கு மின்சாரம் இன்று தேவைப்படுகிறது. இந்த மின்சாரத்தின் பயன்பாட்டால் அதிகம் நேரம் செய்யக்கூடிய வேலைகள் கூட சிறிது நேரத்தில் அதிக அளவில் செய்யப்படுகிறது. இதனால் மின்சாரம் நம்முடைய வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. மின்சார இல்லாத வாழ்க்கையை இன்று மக்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தநிலையில் பின்னலாடை தொழில் நகரமாக விளங்கும் திருப்பூர் மாநகரில் அதிகளவில் தொழிற்சாலைகள், பொதுமக்கள் வசிப்பதனால் மின்சாரத்தின் பயன்பாடு அதிகம் உள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே பராமரிப்பு இன்றி கிடக்கும் மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கூறியதாவது:-
சிமெண்டு காரைகள் பெயர்ந்து
பாலு, (பெட்டிகடை வியாபாரி):-
ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு அருகில் உள்ள மின்கம்பங்கள் சிமெண்டு காரைகள் பெயர்ந்து மின்கம்பிகள் வெளியில் தெரியும் வகையில் உள்ளது. இந்த மின்கம்பம் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக இப்படியே மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த மின்கம்பத்தை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ரஞ்சித், (ஊத்துக்குளி):-
பாளையக்காடு பகுதியில் உள்ள மின்கம்பங்கள் பராமரிப்பு இன்றி உள்ளதால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக காற்று வேகமாக வீசும் சமயத்தில் மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழுந்து விபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது. அருகில் சாலை உள்ளதால் சாலையில் விழும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படவும், விபத்து ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த மின்கம்பத்தை விரைவில் பராமரித்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
வேறோரு இடத்திற்கு
வெங்கட்ராமன், (கம்பெனி தொழிலாளி):-
கட்டபொம்மன்நகர் முதல் கொடிகம்பம் வரை செல்லும் ரோட்டின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் 4 ஆண்டுகளுக்கு மேலாக இப்படியேதான் கிடக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக இந்த பகுதி அருகில் பள்ளி இருப்பதால் காலை, மாலை நேரங்களில் இந்த சாலை வழியாக செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் குறுகிய சாலையின் நடுவில் இதுபோன்ற மின்கம்பம் நடுவில் இருப்பதால் பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இந்த மின்கம்பத்தை வேறோரு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்சவேனி, (கட்டபொம்மன்நகர்):-
கட்டபொம்மன்நகர் பகுதியில் சாலையின் நடுவில் உள்ள இந்த மின்கம்பத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ரோடு மோசமாக உள்ளதால் இந்த மின்கம்பத்தில் மோதி விபத்து நேரிடவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுபோன்ற அசம்பாவிதம் எதாவது ஏற்படுவதற்கு முன் இந்த மின்கம்பத்தை மாற்றி அமைத்தால் போக்குவரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
மின்தடை நாட்களில்
இதுபோல் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றி தாழ்வாக உள்ளது. சமீபத்தில் ரோடு அமைக்கப்பட்டதால் உயரம் கூடி தாழ்வாக மின்மாற்றி காட்சி அளிக்கிறது. மேலும் இந்த மின்மாற்றியை சுற்றிலும் வேலி அமைக்கப்படவில்லை. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே பொதுமக்கள் உயிரை பாதுகாக்கும் வகையில் மின்மாற்றியை சுற்றி வேலி அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் கட்டபொம்மன்நகர் மெயின் ரோடு நடுவில் மின்கம்பம் இருக்கிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ரோட்டின் நடுவில் மின்கம்பம் இருப்பதால் இரவில் விபத்து ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற மின்சாரம் சார்ந்த பிரச்சினைகளை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. அப்போதுதான் தடையின்றி மின்வினியோகம் கிடைக்கும். அதேபோல் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாது. எனவே மின்சாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மின்தடை செய்யப்படும் நாட்களில் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பார்களா?
படங்கள் உண்டு.