பழுதடைந்த ஆற்று பாலத்தால் பொதுமக்கள் அச்சம்
தஞ்சை அருகே பழுதடைந்த நிலையில் உள்ள ஆற்றுப்பாலத்தால் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள். அது சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்;
தஞ்சை அருகே பழுதடைந்த நிலையில் உள்ள ஆற்றுப்பாலத்தால் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள். அது சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
கல்லணைக்கால்வாய்
தஞ்சை மாவட்டம் காவிரி ஆறு பாயும் பகுதியாகும். இந்த தஞ்சை மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் ஆகிய ஆறுகளின் மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் கல்லணைக்கால்வாய் ஆறு மூலம் மட்டுமே தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் 2½ லட்சம் ஏக்கர் வரை பாசன வசதி பெற்று வருகிறது.இந்த கல்லணைக்கால்வாய் ஆறு, கல்லணையில் இருந்து தொடங்கி பூதலூர், தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவோணம், பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி அளிக்கிறது.
சிறிய பாலங்கள்
இந்த மாவட்டத்தில் கல்லணைக்கல்வாயில் இருந்து பிரிந்து கிளை ஆறுகளும், ஏ பிரிவு, பி பிரிவு, சி பிரிவு, டி. பிரிவு, இ பிரிவு பாசன வாய்க்கால்களும் உள்ளன. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கருப்பட்டி கிராமத்தில் கல்லனை கால்வாயின் பிரிவு பாசன உளவாயல் ஆறு என சொல்லப்படும் கிளை ஆறு உள்ளது.இந்த ஆறு மூலம் மட்டும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஆங்காங்கே சிறிய பாலங்களும் உள்ளன. இந்த பாலங்கள் வழியாக விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு வசதியாக உள்ளது.
பழுதடைந்த பாலங்கள்
இந்த பாலத்தின் வழியாகத்தான் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், அறுவடை காலங்களில் டிராக்டர், அறுவடை எந்திரங்கள் சென்று வருகின்றன. இந்த ஆற்றின் மீது கட்டப்பட்ட ஒரு பாலம் சேதம் அடைந்து பாதி இடிந்து விட்டது. இதனால் அந்த பாலம் அந்தரத்தில் நிற்பது போல உள்ளது. அந்த பாலமும் பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லை.இதற்கு அருகில் உள்ள மற்றொரு பாலமும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பாலமும் சேதமடைந்து காணப்படுகிறது. பாலத்தின் தடுப்பு சுவர்களில் 2 பகுதியிலும் சிறிது தூரம் இடிந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள்.
புதிய பாலம் கட்டப்படுமா?
எனவே இந்த பகுதியில் ஏற்கனவே பாதி இடிந்த நிலையில் உள்ள பாலத்தை புதிதாக கட்டித்தர வேண்டும். மேலும் இடியும் நிலையில் உள்ள பாலத்தையும் புதிதாக சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.