குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கும் சாலை
கூத்தாநல்லூர் அருகே குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராமங்களை இணைக்கும் சாலை
கூத்தாநல்லூர் அருகே உள்ள, விழல்கோட்டகம் கிராமத்தில் இருந்து, தேவங்குடி செல்லும் சாலை மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலை ஆகும். மேலும் இந்த சாலை தேவங்குடி, விழல்கோட்டகம், கள்ளவாழச்சேரி, சித்தாம்பூர், அரிச்சபுரம், கற்கோவில், வெள்ளக்குடி, லெட்சுமாங்குடி, பொதக்குடி மற்றும் 30- க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் முக்கிய வழித்தட சாலையாகவும் உள்ளது. இந்த சாலையில் பள்ளி வாகனங்கள் மற்றும் கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
சீரமைக்க கோரிக்கை
மக்கள் பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த சாலை கடந்த சில வருடங்களாக சேதமடைந்து குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் சாலை முழுவதும் கற்கள் சிதறிக்கிடக்கின்றன. இதனால் இந்த சாலையில் செல்லும் மக்கள் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள். குறிப்பாக இரு சக்கர வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகிறது. , எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கும் சாலையை முழுமையான தார்சாலையாக மாற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.