திண்டுக்கல்லில் குண்டும், குழியுமான பேவர் பிளாக் சாலைகள்


திண்டுக்கல்லில் குண்டும், குழியுமான பேவர் பிளாக் சாலைகள்
x

திண்டுக்கல் நகரின் பல்வேறு இடங்களில் பேவர் பிளாக் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளன. அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் நகரின் பல்வேறு இடங்களில் பேவர் பிளாக் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளன. அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பேவர் பிளாக் சாலை

மழைக்காலத்தில் தார்சாலைகளில் தேங்கும் தண்ணீர் நிலத்துக்குள் புகாமல் சாலையிலேயே தேங்கி நிற்கும். இதனால் தார்சாலைக்கு மாற்றாக சிமெண்டு, கான்கிரீட் சாலைகள் அமைக்கப்படுகிறது. இந்த சாலைகளில் மழைநீர் தேங்காமல் மண்ணுக்குள் சென்று ஓரளவு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது. இதையடுத்து மழைக்காலத்தில் தண்ணீர் முழுமையாக நிலத்துக்குள் செல்வதற்காகவே சாலை அமைக்கும் பணிக்கு பேவர் பிளாக் கற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி வார்டு பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள தெருக்களில் பேவர் பிளாக் கற்களை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாக மழைக்காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் முழுமையாக மண்ணுக்குள் சென்றது. இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அதன் பிறகு குடிநீர் குழாய் பதிப்பு, பாதாள சாக்கடை அமைக்கும் பணி ஆகியவற்றுக்காக பேவர் பிளாக் சாலைகள் தோண்டப்பட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

குண்டும், குழியுமாக மாறியது

ஆனால் பணிகள் நிறைவடைந்ததும் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படவில்லை. அதேபோல் பெயர்த்து எடுக்கப்பட்ட பேவர் பிளாக் கற்களும் மீண்டும் பதிக்கப்படவில்லை. இதனால் நகரில் உள்ள பல்வேறு தெருக்களில் உள்ள சாலைகள் தற்போது குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக தெருவாசிகள் மட்டுமின்றி அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் பேவர் பிளாக் சாலைகள் சேதமடைந்ததால் மழைக்காலத்தில் தண்ணீர் குளம் போல் அப்பகுதிகளில் தேங்கி நிற்கிறது. சாலைகளும் சகதிக்காடாக மாறுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத அவலநிலை ஏற்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல் ஜி.டி.என்.சாலை, அரசுநகர், லட்சுமி சுந்தரம் காலனி, ரவுண்டு ரோடு, கருணாநிதிநகர், ஆர்.எம்.காலனி, பிச்சாள்நாயுடு தெரு, ஒத்தவண்டி பாதை, தாத கோனார் தெரு போன்ற இடங்களில் பேவர் பிளாக் சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதுகுறித்து அப்பகுதிகளை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

பாதாள சாக்கடை பணி

மகாலிங்கம் (எலக்ட்ரீசியன், ஆர்.எம்.காலனி):- திண்டுக்கல் சுபேதார் தெருவில் கடை வைத்துள்ளேன். அந்த தெருவில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு பாதாள சாக்கடை பணி நடந்தது. அதற்காக பேவர் பிளாக் கற்களும் பெயர்த்து எடுக்கப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் முடிந்ததும் பள்ளங்கள் முறையாக மூடப்படவில்லை. பேவர் பிளாக் கற்களும் பதிக்காமல் விடப்பட்டன.

இதனால் தெருவுக்குள் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் அந்த வழியாக நடந்து வருபவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியசாமி (தனியார் நிறுவன ஊழியர், ஆர்.எம்.காலனி):- ஆர்.எம்.காலனி 11-வது கிராஸ் ரோட்டில் குடிநீர் குழாய் பதிப்பு, பாதாள சாக்கடை பணியால் பேவர் பிளாக் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. 3 ஆண்டுகளுக்கும் மேல் சாலை சீரமைக்கப்படாமலேயே உள்ளது. இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தோம். ஆனாலும் தற்போது வரை சாலை சீரமைக்கப்படவில்லை.

நடவடிக்கை வேண்டும்

கார்த்திகா (குடும்ப தலைவி, ஒத்தவண்டி பாதை):- எங்கள் பகுதியில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணி மேற்கொண்ட போது தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படவில்லை. இதனால் பேவர் பிளாக் சாலை சேதமடைந்தது. கற்களும் வரிசையாக பதிக்கப்படாமல் குறுக்கும், நெடுக்குமாக ஒழுங்கற்ற நிலையில் உள்ளன. இதனால் சாலை பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. இப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் தெருவில் விளையாடும் போது பள்ளத்தில் தவறி விழுந்து படுகாயமடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story