வெள்ளையாற்றின் கரையோரத்தில் படித்துறை கட்டப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் வெள்ளையாற்றின் கரையோரத்தில் படித்துறை கட்டப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் வெள்ளையாற்றின் கரையோரத்தில் படித்துறை கட்டப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
வெள்ளையாறு
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடி, வெள்ளையாற்றின் கரையோரத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு படித்துறை கட்டப்பட்டது. வேளுக்குடி, நீர்மங்கலம், மாளிகைத்திடல், சித்தனங்குடி, கீழபனங்காட்டாங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் வேளுக்குடியில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்கள் குளிப்பதற்கும், ஆடைகளை துவைப்பதற்கும் இந்த படித்துறையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த படித்துறை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது. சிமெண்டு தளங்களால் கட்டப்பட்ட இந்த படிக்கட்டுகள் இடிந்து ஒன்றன் பின் ஒன்றாக சரிந்து விழுந்து, எளிதில் இறங்க முடியாத அளவுக்கு சேதமடைந்து உள்ளது.
புதிய படித்துறை
இதனால், வயதானவர்கள் மற்றும் பெண்கள் இந்த படித்துறையை முழுமையாக பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் படிக்கட்டுகளில் இறங்கிய சிலர் ஆற்றுக்குள் விழுந்து காயம் அடைந்துள்ளனர். இதனால் படித்துறையை பயன்படுத்த முடியாமல் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். எனவே சேதமடைந்த படித்துறையை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக படித்துறை கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.