சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாசன வாய்க்கால் மதகு
திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர்- வடபாதிமங்கலம் சாலையில் நாகங்குடி கிராமம் உள்ளது. இந்த நாகங்குடி கிராமத்தையொட்டிய சாலையோரத்தில் அப்பகுதி விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை வயல்களுக்கு கொண்டு சென்று சாகுபடி செய்வதற்காக பாசன வாய்க்கால் மதகு மற்றும் சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டு 2 பக்கமும் தடுப்பு சுவர் கட்டப்பட்டது.நாகங்குடி, பழையனூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பாசன வாய்க்கால் மதகு மூலம் வயல்களுக்கு தேவையான தண்ணீரை கொண்டு சென்று நெல், உளுந்து, பயறு, பருத்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
சேதம்
மேலும், தடுப்பு சுவரையொட்டி அமைக்கப்பட்ட திருகு மதகு மூலம், ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை தேவையான நேரத்தில் பாசன வாய்க்காலில் திறந்து விடுவதற்கும், தண்ணீரை தேவையற்ற நேரத்தில் மூடி விடுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நாகங்குடி பாசன வாய்க்கால் மதகு மற்றும் தரை பாலம் தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது தடுப்பு சுவர் 2-ஆக உடைந்து எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் உள்ளது.மேலும் திருகு மதகும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
தரைப்பாலம்
இந்த மதகு அமைக்கப்பட்ட இடம் ஆபத்தான வளைவில் உள்ள சாலையோரம் என்பதால் சாலையிலும் சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட சேதமடைந்த தடுப்பு சுவர் மற்றும் திருகு மதகை அகற்றி விட்டு அதே இடத்தில் சாலையின் குறுக்கே புதிதாக தரைப்பாலம் கட்டி 2 பக்கமும் அகலப்படுத்தி தடுப்புச் சுவர் மற்றும் திருகு மதகு அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.