இப்ப விழுமோ... எப்ப விழுமோ அச்சத்தில் தொகுப்பு வீடுகளில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியினர்
இப்ப விழுமோ... எப்ப விழுமோ என்கிற நிலையில் உள்ள வீடுகளில் மலைவாழ் பழங்குடியினர் வசித்து வருகின்றனா்.
விழுப்புரத்தை அடுத்த ஆலங்குப்பம் ரெயில்வே நிலையத்திற்கு அருகில் மலைவாழ் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த 16 குடும்பங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டுமனை வழங்கி அதில் தொகுப்பு வீடுகளையும் அரசு கட்டிக்கொடுத்தது.
இந்த தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு நீண்ட வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அந்த வீடுகளை அவ்வப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிப்பு செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதன் விளைவு தற்போது அந்த தொகுப்பு வீடுகள் அதிகளவில் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் அளவிற்கு ஆபத்தான நிலையில் உள்ளது.
அச்சத்தில் மக்கள்
மேலும் வீட்டின் பக்கவாட்டு சுவர்களும் பழுதடைந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்ட நிலையில் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் கசிவதால் குழந்தைகளை வைத்துக்கொண்டு நிம்மதியாக தூங்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த சமயத்தில் அவர்கள், அருகில் உள்ள பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இங்குள்ள வீடுகள் இப்ப விழுமோ... எப்ப விழுமோ என்ற நிலையில் அங்கு வசித்து வரும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
மக்கள் கருத்து
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் கூறுகையில், இங்கு குடியிருப்பு மனை வழங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. சாலை வசதி, வடிகால் வாய்க்கால் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை பெய்யும்போதெல்லாம் 2 மாத காலம் வரை தண்ணீரிலேயே வாழ வேண்டியுள்ளது. தற்போது வீடுகளும் பெருமளவு சேதமடைந்து பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்திலேயே நாட்களை கடக்க வேண்டியுள்ளது. தண்ணீா் வடிய வாய்க்கால் வசதியும் இல்லாததால் நீண்ட நாட்களுக்கு மழைநீா் தேங்கி உடல்நல பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. எனவே புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதேபோல் ராஜ்குமார் கூறுகையில், வீடுகள் சேதமடைந்துள்ளதால் மழைக்காலம் வந்தாலே எங்களுக்கு பயமாக இருக்கிறது. ஒவ்வொரு மழைக்காலத்தின்போதும் வீடுகளுக்குள் தண்ணீர் கசிகிறது. எங்கள் பிரச்சினையை தீர்க்க இதுநாள் வரையிலும் நிரந்தர நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை இல்லாததால் திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிப்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
பலமுறை தாசில்தார், கோட்டாட்சியர், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் அகதிகள்போல் வாழ்கிறோம். எனவே எங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். கலைஞரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகளை ஒதுக்கீடு செய்து உதவி செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.