சிலிண்டர் வெடித்து வீடு சேதம்; பொருட்கள் எரிந்து நா
சிலிண்டர் வெடித்து வீடு சேதம்; பொருட்கள் எரிந்து நாசமானது.
சிலிண்டர் வெடித்தது
காட்பாடி தாலுகா வஞ்சூர் கிராமத்தில் பாலச்சந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். நேற்று இவர் குடும்பத்துடன் அரியூர் சென்றார். மாலை சுமார் 4.45 மணிக்கு அந்த வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்தது. சிலிண்டர் வெடித்ததால் வீடு தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீரை ஊற்றினர். மேலும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீ மேலும் பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அணைத்தனர்.
உயிர் சேதம் தவிர்ப்பு
இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் நகை, பணம் ஆகியவை இருந்து நாசமானதாக தெரிகிறது. மேலும் வீட்டின் மேற்கூரை சிலிண்டர் வெடித்ததால் சிதிலமடைந்தது. வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டது. சிலிண்டர் வெடித்த சம்பவம் நடந்தபோது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் அறிந்த காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், விருதம்பட்டு போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட பாலச்சந்தர் குடும்பத்திற்கு வருவாய்த்துறை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.