மரக்காணம் கலவரத்தில் பொதுச்சொத்து சேதம்: ரூ.18 லட்சம் இழப்பீடு கேட்டு பா.ம.க.வுக்கு அரசு அனுப்பிய நோட்டீஸ் ரத்து
மரக்காணம் கலவரத்தில் பொதுசொத்துகளை சேதப்படுத்தியதற்காக ரூ.18 லட்சம் இழப்பீடு கேட்டு பா.ம.க.வுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய நோட்டீசை ரத்துசெய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து கடந்த 2013-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா நிகழ்ச்சியை நடத்தியது. இந்த விழாவில் கலந்துகொள்ள ஏராளமானோர் பல்வேறு ஊர்களில் இருந்து வாகனங்களில் சென்றனர். இந்த வாகனத்தில் சென்றவர்களுக்கும், மரக்காணத்தை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் மிகபெரிய கலவரம் வெடித்தது.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட 500-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பொது சொத்துகள் சேதம்
அதில், இவர்கள் போலீசாரின் அனுமதியை மீறி மரக்காணம் அருகேயுள்ள கட்டயம் தெரு என்ற பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த தலைவர்களின் சிலைகள், மற்றும் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் விசாரணை நடத்தினார். பின்னர், பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ரூ.18 லட்சத்தை இழப்பீடாக அரசுக்கு வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாசுக்கு ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார்.
அரசு அனுப்பிய நோட்டீஸ் ரத்து
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வழக்கு தொடர்ந்தார். அதில், கலவரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், பொதுச்சொத்துகளை எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியதாக கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் கே.பாலு ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, பா.ம.க.விடம் இழப்பீடு கேட்டு வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பிய நோட்டீசை ரத்துசெய்து நீதிபதி உத்தரவிட்டார்.