தேனி மாவட்டத்தில் ஊசி 'ஈ' தாக்குதலால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு
தேனி மாவட்டத்தில் ஊசி ‘ஈ’ தாக்குதலால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் உப்புக்கோட்டை, கோட்டூர், சின்னமனூர், கூடலூர், போடி உள்ளிட்ட பகுதிகளில் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் மல்பெரி செடிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இதன்மூலம் பட்டுப்புழுக்கள் வளர்க்கப்பட்டு, பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டுக்கூட்டில் கோலார் கோல்டு (மஞ்சள்), ஒயிட் (வெள்ளை) ஆகிய 2 ரக பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தேனி மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஒயிட் ரக பட்டுக்கூடு தான் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி மையங்களில் பட்டுப்புழுவில் தற்போது ஊசி 'ஈ' தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பட்டுப்புழு கூடு கட்டுவதற்கு 5 நாட்கள் இருக்கும் நிலையில் புழுக்களை ஊசி 'ஈ'க்கள் தாக்குகின்றன. அப்படி தாக்கும்போது புழுக்களின் உடலில் முட்டையிடும். அந்த முட்டைகள் பட்டுப்புழு கூடு கட்டும் நேரத்தில் ஆயிரக்கணக்கான ஊசி 'ஈ'க்களாக வெளியே வருகிறது. இதனால் பட்டுப்புழு கூடு கட்டாமலேயே இறந்துவிடுவதுடன், பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.