மாநகராட்சி குப்பை கிடங்கில் அமைக்கப்பட்ட தடுப்புகள் சேதம்


மாநகராட்சி குப்பை கிடங்கில் அமைக்கப்பட்ட தடுப்புகள் சேதம்
x

பலத்த காற்றின் காரணமாக கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் அமைக்கப்பட்ட தடுப்புகள் சேதமடைந்துள்ளன.

கரூர்

குப்பை கிடங்கு

கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் இருந்து சற்று தொலையில் கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பொது இடங்களில் தேங்கும் குப்பைகளை சேகரித்து இந்த குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. பல ஆண்டுகளாக அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகள் சாலையில் பறந்து செல்வதை தடுக்கும் வகையில் குப்பை கிடங்கின் தடுப்புச்சுவர் மீது கூடுதலாக பிளாஸ்டிக் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

பொதுமக்கள் கோரிக்கை

இந்நிலையில் பலத்த காற்றின் காரணமாக தற்போது அந்த தடுப்புகள் சேதமடைந்துள்ளன. இதனால் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் காற்றின் காரணமாக சாலையில் வந்து விழுகின்றன. இதன்காரணமாக அந்த சாலையின் வழியாக பயணம் செய்யும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே குப்பை கிடங்கில் உடைந்த பிளாஸ்டிக் தடுப்புகளை அகற்றிவிட்டு, புதிய தடுப்புகளை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story