தலைவாசல் மேம்பாலத்தில் தடுப்பு சுவர் இடிந்து சேதம் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்


தலைவாசல்   மேம்பாலத்தில் தடுப்பு சுவர் இடிந்து சேதம்   அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
x

தலைவாசலில் மேம்பாலத்தில் தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

சேலம்

தலைவாசல்,

தலைவாசல் பஸ் நிலையம் அருகில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வசிஷ்ட நதியில் மேம்பாலம் உள்ளது. சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தில் வலதுபுறம் உள்ள 10 அடி உயர தடுப்பு சுவர் மற்றும் 4 அடி உயரமுள்ள தடுப்பு சுவர் சுமார் 10 அடி நீளத்திற்கு திடீரென இடிந்து விழுந்து சேதம் ஆகியுள்ளது. தடுப்பு சுவரின் இடிந்த பகுதி சாலையில் செல்லும் வாகனத்தின் மீது விழுந்து இருந்தால் பலத்த உயிர் சேதம் ஏற்படுத்தி இருக்கும். பாலத்திற்கு அடியில் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். மோட்டார் சைக்கிள் மூலம் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் பஸ் நிலையத்திற்கு சென்று வருகின்றனர். தடுப்பு சுவர் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இடிந்து விழுந்துள்ளதால் உயிர்ப்பலி ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் இந்த பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி பாலம் சேதம் அடைந்து இருக்குமா? அல்லது வலுவிழந்த தடுப்பு சுவர் தானாகவே இடிந்து விழுந்து இருக்குமா? என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தலைவாசல் போலீசாரும் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த பாலம் வழியாக செல்பவர்கள் விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பான பிளாஸ்டிக் தடுப்பு சுவர் அமைத்து சேதம் அடைந்த பகுதி என அடையாளம் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story