பாலத்தின் முகப்பில் இடிந்து விழுந்த தடுப்பு சுவர்
கூத்தாநல்லூர் அருகே பாலத்தின் முகப்பில் இடிந்து விழுந்த தடுப்பு சுவரை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே பாலத்தின் முகப்பில் இடிந்து விழுந்த தடுப்பு சுவரை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடைபாலம்
கூத்தாநல்லூர் அருகே, அரிச்சந்திரபுரம் கடைவீதிக்கும், உச்சுவாடி கிராமத்திற்கும் இடையே, வெண்ணாற்றின் குறுக்கே நடைபாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை வடபாதிமங்கலம், அரிச்சந்திரபுரம், பெரியகொத்தூர், சேந்தங்குடி, உச்சுவாடி, மன்னஞ்சி, ராமநாதபுரம், குலமாணிக்கம், பள்ளிவர்த்தி, வடவேற்குடி, சோலாட்சி, மாவட்டக்குடி, செருவாமணி மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பெரிய பள்ளம்
இந்த பாலத்தின் முகப்பில் உள்ள பாலத்தை தாங்கி நிற்கும் தடுப்பு சுவர்கள் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு இடிந்து ஆற்றுக்குள் விழுந்து விட்டது. ஆனால், இடிந்து விழுந்த தடுப்பு சுவர் இருந்த இடத்தில் இதுவரை தடுப்பு சுவர் கட்டப்படவில்லை. இதனால் முகப்பில் சரிவு ஏற்பட்டு பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.இந்த பாலத்தை கடக்கும் போது பள்ளத்தில் விழுந்து பலர் காயம் அடைகிறார்கள். மேலும், இரவு நேரங்களில் சிலர் ஆற்றுக்குள் விழுந்து உள்ளனர். அப்போது, அப்பகுதி மக்கள் விழுந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தடுப்புச்சுவர்
இதனால், வயதானவர்கள், பள்ளி மாணவர்கள், அவசரமாக கடைவீதி, பஸ் நிறுத்தம் போன்ற இடங்களுக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, பெரிய அளவில் விபரீதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மண் சரிவு ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்து பாலத்தின் முகப்பில் 2 பக்கமும் தடுப்பு சுவர் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.