குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை சீரமைக்க வேண்டும்
பூதலூர் ஒன்றியத்தில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி,
பூதலூர் ஒன்றியத்தில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்
பூதலூர் ஒன்றியத்தில் மாரநேரி ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தரமான குடிநீர் வழங்க ரூ. 8 லட்சம் மதிப்பில் 2 இடங்களில் குடிநீர் வழங்கும் அமைப்புகள் அமைக்கப்பட்டன. சிமெண்டு மேடை அமைத்து அதில் குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்கப்பட்டது. அருகில் குடிநீர் தொட்டி மின் இணைப்பு கொடுக்கப்பட்டு காசுகள் போட்டால் குடிநீர் வரும் வகையில் அமைக்கப்பட்டது.கட்டி முடிக்கப்பட்டு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு சில நாட்கள் கூட இந்த அமைப்புகள் செயல்படவில்லை. தற்போது மந்தை பகுதியில் பயணிகள் நிழற்குடையை மறைத்து அமைக்கப்பட்டு இருந்த குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பின் குடிநீர் தொட்டி உடைந்து போய் உள்ளது.ரூ.8 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் செய்யப்பட்ட கருவி முழுமையாக செயல்படுத்த முடியாமல் உள்ளது.
நடவடிக்கை
தற்போதுகடுமையான கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தபோதிலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட இந்த எந்திரம் வீணாகி உள்ளது.மாரநேரி கிராமத்தில் மற்றும் ஒரு இடத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பும் செயல்படவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். இதே போல பூதலூர் ஒன்றிய பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் வழங்கும் அமைப்புக்கள் செயல்படுவது குறித்து ஆய்வு செய்து அனைத்தையும் சீராக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளனர்.