தண்ணீர் ஏற்ற முடியாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி


தண்ணீர் ஏற்ற முடியாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
x

கரம்பயம் ஊராட்சியில் தண்ணீர் ஏற்ற முடியாத நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

கரம்பயம்;

கரம்பயம் ஊராட்சியில் தண்ணீர் ஏற்ற முடியாத நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரம்பயம் ஊராட்சியில் முத்து மாரியம்மன் கோவிலுக்கு எதிரே சுமார் 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பாகம், மேல் பாகம், என அனைத்தும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுந்து உள்ளதால் எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமித்து வைத்து அதை 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் அருகில் உள்ள பள்ளிக்கூடம் ஆகியவற்றில் பயன்படுத்தி வந்தனர்.

இடிந்து விழும் அபாயம்

தற்பொழுது நீர் ஏற்றினால் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பாரம் தாங்காமல் இடிந்து விழுந்து விடும் என்ற அச்சத்துடன் அப்பகுதி மக்கள் நீரை மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏற்றுவதை நிறுத்திவிட்டு தரையிலேயே ஆழ்குழாய் போரில் இருந்து நேரடியாக நீரை எடுத்து வருகின்றனர். இவ்வாறு நேரடியாக நீர் எடுப்பதால் அழுத்தம் கிடைக்காமல் அனைத்து இடங்களுக்கும் தண்ணீர் செல்வது மிகவும் கடினமாக உள்ளது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் வரும்போது மிக வேகமாக அனைத்து இடங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும். தரையில் இருந்து தண்ணீர் அனுப்பும் போது வேகமாக செல்லாததால் கடைக்கோடி வரை தண்ணீர் செல்வது மிகவும் தாமதமாகிறது.

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

எனவே தண்ணீர் ஏற்றாமல் காலியாக இருக்கின்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒருநாள் விழுந்து விட்டால் கூட மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே பொதுமக்களின் நலன் கருதி பயன்படாத மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இ்டித்து அகற்றிவிட்டு புதிதாக ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story