1964-ம் ஆண்டு புயலால் கடும் பாதிப்பு: பழமை மாறாமல் தனுஷ்கோடியை புனரமைக்கும் பணி விரைவில் தொடங்கும்-சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தனுஷ்கோடியை ரூ.5 கோடியில் பழமை மாறாமல் புனரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
ராமேசுவரம்,
புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தனுஷ்கோடியை ரூ.5 கோடியில் பழமை மாறாமல் புனரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
அமைச்சர் ஆய்வு
ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று வந்தார். அவர் அக்னி தீர்த்த கடற்கரை அருகே உள்ள தமிழ்நாடு ஓட்டலுக்கு சென்று சுற்றுலா பயணிகள் தங்கும் அறை, அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
1964-ம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயலால் அழிந்த தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் உள்ள கிறிஸ்தவ ஆலய கட்டிடங்களையும், அரிச்சல்முனை கடற்கரையையும் பார்வையிட்டார்.
அப்போது கலெக்டர் விஷ்ணுசந்திரன், சுற்றுலாத்துறை ஆணையாளர் சந்தீப்நந்தூரி, காதர்பாட்ஷா முத்துராமலிங்கம எம்.எல்.ஏ., ராமேசுவரம் நகரசபை தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, முன்னாள் நகரசபை தலைவர் அர்ஜுனன், தொழிலாளர் அணி அமைப்பாளர் ரவிக்குமார், நகரசபை ஆணையாளர் கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ரூ.5 கோடி நிதி
ஆய்வுக்கு பின்பு அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா இடங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொண்டு, நம்பர் ஒன் துறையாக சுற்றுலாத்துறையை மாற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி தமிழகம் முழுவதும் 24 மாவட்டங்களில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறேன். புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியை பழமை மாறாமல் புனரமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு வந்து ஆய்வு செய்ததில் இந்த நிதி போதாது என்று தெரிகிறது.
ஹெலிகாப்டர் தளம்
அதுபோல் ராமேசுவரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஓட்டலில் ரூ.7 கோடி நிதியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிக்கு மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 1¾ கோடி சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர்.
ராமேசுவரத்திற்கு சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டரில் வந்து செல்லும் வகையில் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள நடராஜபுரம் கிராமத்தில் 13.16 ஏக்கரில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 2 ஹெலிகாப்டர்கள் நிறுத்தும் வகையில் தளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைதொடர்ந்து உச்சிப்புளி அரியமான் கடற்கரைக்கும் சென்று சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.