பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்த தடுப்பணைகள்
கடமலை-மயிலை ஒன்றியத்தில் பராமரிப்பு இல்லாமல் தடுப்பணைகள் சேதம் அடைந்துள்ளன. அதனை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தடுப்பணை சேதம்
கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, உருட்டிமேடு ஆகிய பகுதிகளில் மூலவைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகளில் போதிய அளவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது வருசநாட்டில் கட்டப்பட்டிருந்த தடுப்பணை சேதமடைந்தது. அதனை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அடுத்தடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நேரங்களில் தடுப்பணை தொடர்ந்து சேதமடைய தொடங்கியது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தற்போது வருசநாடு தடுப்பணை முழுவதுமாக சேதமடைந்து காட்சி அளிக்கிறது. இதனால் மழை பெய்து ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டாலும், அதனை தேக்கி வைத்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதேபோல மயிலாடும்பாறை, உருட்டிமேடு உள்ளிட்ட தடுப்பணைகளும் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வருகிறது. இந்த 2 தடுப்பணைகளின் பக்கவாட்டு சுவர் மற்றும் முன் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் சேதமடைந்துள்ளது.
அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணைகள் அதிகளவில் சேதமடையும் முன்பு உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் வருசநாட்டில் புதிய தடுப்பணை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.