சேதமடைந்த சுகாதார வளாகம்


சேதமடைந்த சுகாதார வளாகம்
x

சீர்காழி கீழதென்பாதியில் சேதமடைந்த சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு கீழதென்பாதி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.

சேதமடைந்தது

இந்த சுகாதார வளாகம் முறையாக பராமரிக்கப்படாததால் கட்டிடம் மிகவும் சேதமடைந்தது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக இந்த சுகாதார வளாகம் செயல்படாமல் உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் சாலை ஓரங்களிலும், வயல்வெளிகளிலும் இயற்கை உபாதையை கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, இந்த சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரமைக்க கோரிக்கை

இதுகுறித்து இப்பகுதி கவுன்சிலர் ரம்யா தனராஜ் கூறுகையில், கீழதென்பாதி பகுதியில் வசிப்பவர்கள் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். இங்குள்ள பெரும்பாலான வீடுகளில் கழிவறை வசதி கிடையாது. இதனால், அவர்கள் இந்த சுகாதார வளாகத்தைதான் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது இந்த சுகாதார வளாகம் சேதமடைந்துள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லை. இதனால், இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே, இந்த சுகாதார வளாகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story