சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம்
செருதியூரில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
செருதியூரில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சேதமடைந்த ரேஷன் கடை
மயிலாடுதுறை ஒன்றியம் செருதியூர் ஊராட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த கட்டிடம் சேதமடைந்தது.
கட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தது. மேலும் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மழை காலங்களில் கட்டிடத்துக்குள் தண்ணீர் கசிந்து உணவு பொருட்கள் சேதம் அடைந்தன.
நூலக கட்டிடத்திற்கு மாற்றம்
இதை தொடர்ந்து அருகில் உள்ள நூலக கட்டிடத்திற்கு ரேஷன் கடை மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக நூலகத்துக்கு வரும் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு நூல்கள் மற்றும் தினசரி நாளிதழ்களை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் மயிலாடுதுறை நகரில் உள்ள நூலகத்திற்கு சென்று படித்து வருகின்றனர். செருதியூர் ஊராட்சியில் நூலகம் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடித்து அகற்ற வேண்டும்
இந்த நூலக கட்டிடமும் சேதமடைந்து மழைநீர் ஒழுகுவதால் உணவு பொருட்கள் சேதம் அடையும் நிலை உள்ளது . எனவே பொதுமக்களுக்கு தடையின்றி உணவு பொருட்கள் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.