இடிந்து விழும் நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம்
சீர்காழியில் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழியில் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சேதமடைந்த கட்டிடம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி இந்திரா நகரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு சீர்காழி, கைவிளாச்சேரி, தாடாளன் கோவில், விளந்திட சமுத்திரம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, வடகால், கடவாசல், திருக்கருகாவூர், எடமணல், திருமுல்லைவாசல், ராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு சான்றுகள் பெறுவதற்காக வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இடித்து அகற்ற வேண்டும்
இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், எப்போது கட்டிடம் இடிந்து விழும் என அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பு ஆபத்தான நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.