சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சிக்கல்:
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் வாசுகி நாகராஜன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் புருஷோத்தமதாஸ், ஒன்றிய ஆணையர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
புருஷோத்தமதாஸ் (துணைத்தலைவர்):- ஆந்தகுடி தெற்கு தெரு சாலை, காக்கழனி அங்காடி செல்லும் சாலை, மணலூர் தெற்கு தெரு செல்லும் சாலை ஆகியவற்றை தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டும்.
சேதமடைந்த சாலைகள்
கண்ணன் (தி.மு.க.):-வெண்மணி ஊராட்சி நாணக்குடி- மைலாங்குடி சாலை இரண்டு ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. உள்ளது அதை சரி செய்ய வேண்டும். மேலகாவலக்குடி கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
எனவே அந்த பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும். தேவூர் ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. அதை உடனே சரி செய்ய வேண்டும்.
வாசுகி (தி.மு.க):- 75 அனக்குடி ஊராட்சி இரிஞ்சூர் கிராமத்தில் கீழத்தெரு, மேலத்தெரு சாலைகள் சேதமடைந்துள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். கிள்ளுக்குடி ஊராட்சி காரியமங்கலம் 1-வது வார்டில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைத்து தார்ச்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருணாநிதிக்கு சிலை
கருணாநிதி (தி.மு.க.):- கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிலை வைக்க வேண்டும்.வங்காரமாவடி - சந்துவெளி சாலை சேதமடைந்துள்ளது. அதை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பிரவினா, ரேவதி, இல்முன்னிசா, ஹபிபுகனி, அலுவலக மேலாளர் முத்துக்குமரன், துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.