குறிச்சிக்கோட்டை அருகே சேதமடைந்த உடுமலை-மூணாறு சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிச்சிக்கோட்டை அருகே சேதமடைந்த உடுமலை-மூணாறு சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தளி
குறிச்சிக்கோட்டை அருகே சேதமடைந்த உடுமலை-மூணாறு சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை-மூணாறு சாலை
உடுமலையில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறுக்கு செல்வதற்காக போடிபட்டி, பள்ளபாளையம், குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி, அமராவதி உள்ளிட்ட கிராமங்களை கடந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வருகின்ற மலைவாழ் மக்கள் மற்றும் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் சென்று வருகின்றனர்.
போக்குவரத்து நிறைந்த இந்த சாலை முறையான பராமரிப்பின்மை காரணமாக குறிச்சிக்கோட்டை மானுப்பட்டிக்கு இடைப்பட்ட பகுதியில் சேதம் அடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
நடவடிக்கை
சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த சாலை பெரிதும் உதவிகரமாக உள்ளது. குறைவான நேரத்தில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளலாம் என்பதால் அனைவரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ள மண் லாரிகளின் போக்குவரத்தால் சாலை சேதம் அடைந்து உள்ளது.அதை சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன் வரவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் சேதமடைந்த சாலையை கடக்க முற்படும்போது எதிராக வருகின்ற வாகனங்களுடன் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்படும் சூழலும் நிலவுகிறது.
அதுமட்டுமின்றி சேதம் அடைந்த பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்தும் வருகின்றனர். எனவே உடுமலை- மூணாறு சாலையில் குறிச்சிக்கோட்டை மானுப்பட்டிக்கு இடைப்பட்ட பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.