டேன்டீ தொழிலாளர்களுக்கு விரைவில் வீடுகள் வழங்கப்படும்
நீலகிரியில் ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு விரைவில் வீடுகள் வழங்கப்படும் என வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரியில் ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு விரைவில் வீடுகள் வழங்கப்படும் என வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
வீடுகள் வழங்கப்படும்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே அல்லஞ்சி பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- டேன்டீ தோட்டங்களில் புதிதாக பணிக்கு சேருபவர்கள் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். இதனால் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் அல்லஞ்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடுகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த வீடுகளுக்கு தொழிலாளர்கள் ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும் என நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் கூறியிருந்தது. ஆனால், அந்த தொகையை தொழிலாளர்களால் செலுத்த முடியாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறப்பட்டது. தொடர்ந்து ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்குவதற்காக, அவர்கள் செலுத்த வேண்டிய தொகையை அரசே ஏற்கும் என கூறி அதற்காக ரூ.12.43 கோடி விடுவித்து உள்ளார்.
பணப்பலன்கள்
கூடலூர் பகுதியில் டேன்டீயில் பணியாற்றி வரும் 524 பேரும், குன்னூர் பகுதியில் டேன்டீ தோட்டங்களில் பணியாற்றி வரும் 23 பேரும், கோத்தகிரி பகுதியில் பணியாற்றி வரும் 65 தொழிலாளர்களும் பயன் பெறுவார்கள். டேன்டீ தோட்டங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு இலவசமாக வீடுகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. டேன்டீ குடியிருப்புகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சிலருக்கு உடனடியாக பணப்பலன்கள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
தேயிலை தோட்டங்களுக்கு உரங்கள் வாங்குவதற்கு ரூ.4 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. கூடலூர் சேரங்கோடு பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடுகள், அங்கு தேயிலை தோட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். இதேபோல் எந்த பகுதியில் பணியாளர்கள் பணியாற்றி ஓய்வு பெற்றனரோ, அதே பகுதியில் வீடுகள் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.