சம்பள உயர்வு கோரி டேன்டீ தொழிலாளர்கள் போராட்டம்
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் சம்பள உயர்வு கோரி டேன்டீ தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலூர்,
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் சம்பள உயர்வு கோரி டேன்டீ தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பள உயர்வு
நீலகிரி, வால்பாறை ஆகிய மலைப்பிரதேசங்களில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் (டேன்டீ) செயல்பட்டு வருகிறது. நீலகிரியில் நடுவட்டம், பாண்டியாறு, நெல்லியாளம், சேரங்கோடு, கொளப்பள்ளி, குன்னூர் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் டேன்டீயில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.425.40 சம்பளம் வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது.
ஆனால், இதுவரை இந்த சம்பளம் வழங்கவில்லை. இதேபோல் டேன்டீ தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைப்பதை கண்டித்தும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை பணப்பலன்களை உடனடியாக வழங்கக்கோரியும் கடந்த ஒரு வாரமாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் அருகே பாண்டியாறு அரசு தேயிலை தோட்டத்தில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டம்
போராட்டத்தில் சம்பள உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் பலர் கண்டன உரையாற்றினர். இதேபோல் பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-
வெயில், மழை, பனி என எந்த கால நிலையாக இருந்தாலும் அட்டை பூச்சி கடிகள், வனவிலங்குகள் தாக்குதல் உள்பட பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு இடையே பணியாற்றி வருகிறோம். இந்த சூழ்நிலையில் டேன்டீ நிர்வாகம் நிலுவையில் உள்ள பண பலன்களை வழங்குவது இல்லை. சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.