டேன்டீ தொழிலாளர்கள் சாலை மறியல்
ஊதிய உயர்வை அமல்படுத்தக்கோரி டேன்டீ தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலூர்
ஊதிய உயர்வை அமல்படுத்தக்கோரி டேன்டீ தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
நீலகிரி மாவட்டம் மற்றும் கோடை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு தேயிலை தோட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஊதியமாக நாள் ஒன்றுக்கு 425 ரூபாய் 40 பைசா வழங்கப்படும் என்று அரசு அறிவித்து, அரசாணை வெளியிட்டது. ஆனால் இதுவரை அந்த ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
இதை கண்டித்து பந்தலூரில் இன்று தொழிலாளர்கள் பேரணி மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பேரணியானது மேங்கோரேஞ்சு முனீஸ்வரன் கோவில் அருகே தொடங்கி பந்தலூர் பஜாரில் முடிவடைந்தது. பின்னர் அங்கு சாலை மறியல் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதில் டேன்டீ அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு எல்.பி.எப். துணை பொதுச்செயலாளர் மாடசாமி, பி.டபிள்யு.யு.சி. பொதுச்செயலாளர் சுப்பிரமணியம், சி.ஐ.டி.யு. செயலாளர் ரமேஷ், ஐ.என்.டி.யு.சி. லோகநாதன், ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம்
இதேபோன்று கோத்தகிரியில் சோசலிச தொழிற்சங்கத்தின் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அங்குள்ள டேன்டீயில் பணிபுரிந்து வரும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடுமுறை எடுத்து, நேற்று காலை 12 மணிக்கு காமராஜர் சதுக்கதில் திரண்டனர். பின்னர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்று மார்க்கெட் திடலை அடைந்தனர். அங்கு நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கரு.வெற்றிவேல் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் யோகேஸ்வரி, வசந்தன், கவுரவ தலைவர் தியாகராஜன், செயலாளர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் கோரிக்கையை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.
பேச்சுவார்த்தை
இது தவிர குன்னூர் டேன்டீ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோத்தகிரி மற்றும் குன்னூரை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் போஜராஜ் தலைமை வகித்தார். குன்னூர் செயலாளர் ராமசாமி, கோத்தகிரி செயலாளர் பெனடிக்ட், ஏ.டி.பி. நிர்வாகி கந்தையா, வி.சி.க. நிர்வாகி ஜெயபால், பி.எஸ்.என்.எல.் நிர்வாகி ரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து டேன்டீ பொது மேலாளர் மஞ்சுநாத், சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் டேன்டீ நஷ்டத்தில் இயங்கி வருவதால், அரசிடம் இருந்து நிதி கோரி உள்ளோம். மேலும் தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்தவுடன், உயர்த்தப்பட்ட ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று கூறியதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.