அதிவேகமாக செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
அதிவேகமாக செல்லும் லாரிகளால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்திற்கு ஆற்று மணல், எம்.சண்ட், ஜல்லி, கற்கள், செங்கல் போன்ற கட்டுமான பொருட்கள் மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்த கட்டுமான பொருட்களை ஏற்றி வர பெரும்பாலும் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை மலைப்பாதை என்பதால், குறிப்பிட்ட வேகத்தில் செல்ல வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், சமவெளி பகுதிக்கு செல்லும் லாரிகள் அதிவேகமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
குறுகிய வளைவுகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று குன்னூர் பகுதியில் இருந்து கட்டுமான பொருட்களை ஏற்றி வர சென்ற லாரி எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சமவெளி பகுதிக்கு செல்லும் லாரிகள் அதிவேகமாக செல்வதை தடுக்க போலீசார், போக்குவரத்துதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.