பழுதடைந்த மரப்பலகை பாலத்தால் 6 மாதமாக ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மக்கள்
தஞ்சை மழைநீர் வடிகாலில் அமைக்கப்பட்ட மரப்பலகை பாலம் பழுதடைந்ததால் மக்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இதனை அதிகாரிகள் கண்டு கொள்வார்களா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை மழைநீர் வடிகாலில் அமைக்கப்பட்ட மரப்பலகை பாலம் பழுதடைந்ததால் மக்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இதனை அதிகாரிகள் கண்டு கொள்வார்களா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தஞ்சை மாநகராட்சி
தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இதன் மொத்த பரப்பளவு 36.31 சதுர கிலோ மீட்டர் ஆகும். இங்கு கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின்படி 2 லட்சத்து 22 ஆயிரத்து 943 ஆகும். தஞ்சை நகராட்சியாக இருந்து கடந்த 2014-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.தற்போது தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.950 கோடி மதிப்பில் 102 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பலபணிகள் நிறைடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டு பணிகள், மழைநீர் வடிகால் சீரமைப்பு, குடிநீர் மேம்பாட்டு பணிகள், பூங்காக்கள் பராமரிப்பு, நடைபாதை, மின் விளக்குகள் அமைத்தல், அகழி மேம்பாடு, உள்ளிட்ட பல்வேறு விதமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் மழைநீர் வடிகால்கள் சீரமைக்கும் பணிகள் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.
மழைநீர் வடிகால் பாலம்
தஞ்சை கீழவாசல் முள்ளுக்காரத்தெரு பகுதியில் மழைநீர் வடிகால் உள்ளது. இந்த வாய்க்காலில் தற்போது சாக்கடை நீரும் செல்கிறது. மழை காலங்களில் தண்ணீர் அதிக அளவு வரும் போது இந்த பகுதிக்குள்ளும் தண்ணீர் புகுந்து விடுகின்றன.இதனால் மழைநீர் வடிகால் வாய்க்காலை கட்டித்தருவதோடு, பொதுமக்கள் நடந்து செல்வதற்கான பாலத்தையும் உயர்த்தி கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் வாய்க்கால் மீது இருந்த பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள குறிஞ்சிநகர், பாலோபந்தவனம் ஆகிய இடங்களிலும் இதே போன்று தரைப்பாலம் இடிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் நடந்து செல்வதற்கான தற்காலிக மரப்பலகையினால் ஆன பாலம் போடப்பட்டது.
6 மாதம் ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை
தற்போது அந்த பாலமும் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். சில நேரங்களில் மரப்பலகை பாலத்தில் செல்பவர்கள் தவறி வாய்க்காலுக்குள் விழும் நிலையும் உள்ளது. பாலம் இடிக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இதுவரை கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முள்ளுக்காரத்தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு வர வேண்டுமானால் இந்த பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் தற்போது சேதம் அடைந்த நிலையில் பாலம் இருப்பதால் தினமும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். 6 மாதம் ஆகியும் இதுவரை எந்தவித பணிகளும் தொடங்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி உடனடியாக மழைநீர் வடிகால் மீது கான்கிரீட் பாலம் அமைத்து பொதுமக்கள் அச்சமின்றி செல்ல வழி வகை செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.