செல்போனில் காத்திருக்கும் ஆபத்துகள்:மிரள வைக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்


தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடி செய்த ரூ.ரூ.80.61 லட்சத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

தூத்துக்குடி

இணையதள வசதியை பயன்படுத்த ஆங்காங்கே கம்ப்யூட்டர் மையத்தில் காத்து கிடந்த காலங்கள் மாறி, ஒவ்வொருவரின் கையடக்க செல்போனிலேயே அனைத்து இணையதள சேவையையும் பெறும் வசதி வந்து விட்டது.

செல்போன்

பணப்பரிவர்த்தனை, மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இணையத்தின் மூலமே பெற்று விடலாம் என்ற நிலை, மக்களுக்கு மிகவும் வசதியாகவும் மாறி விட்டது. அதேநேரத்தில் இதனை தங்களுக்கு சாதகமாக குற்ற செயல்களில் ஈடுபட்டு பணத்தை நைசாக உருவிச் செல்லும் கும்பலும் வளர தொடங்கி விட்டன.

ஆன்லைன் சேவையை மக்கள் அதிகமாக செல்போனிலேயே பயன்படுத்த தொடங்கிய காலத்தில், அவர்களின் செல்போன் எண்ணை பெறும் மர்ம கும்பல் ஆசை காட்டி பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆன்லைன் மூலம் இழந்த பணத்தை எப்படி மீண்டும் பெறுவது, யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் மக்கள் தத்தளித்து வந்தனர்.

சைபர் குற்றப்பிரிவு

இந்த நிலையில்தான் தமிழக அரசு சைபர் கிரைம் போலீஸ் பிரிவை மாவட்டம் தோறும் விரிவாக்கம் செய்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்திலும் சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலேயே அமைக்கப்பட்டது. முதல்கட்டமாக மாவட்டம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் தேங்கி கிடந்த செல்போன் மாயமான வழக்குகளை எடுத்தனர். மாயமான செல்போன்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட தொடங்கினர். இதன் பயனாக தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 680 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

ரூ.44.30 லட்சம் மீட்பு

மேலும், போலீசார் தினமும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இதனால் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த மக்கள் சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க தொடங்கினர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1093 புகார்கள் வந்து உள்ளன. இதன்மூலம் மொத்தம் ரூ.8.13 கோடியை ஆன்லைன் மூலம் மக்கள் இழந்து உள்ளனர் என்று தெரியவந்தது. புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து ரூ.1.25 கோடியை வங்கியில் முடக்கி வைத்து உள்ளனர். இதே போன்று ரூ.44.30 லட்சத்தை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்து உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் ஆந்திரா, மேற்குவங்காளம், கேரளா போன்ற வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் பணம் மோசடி செய்ததாக 10 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ரூ.50 லட்சத்துக்கு அதிகமாக மோசடி நடந்ததாக ஒரு வழக்கும், ரூ.5 லட்சத்துக்கு அதிகமாகவும் மோசடி நடந்ததாக 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடன் வாங்கி மோசடி செய்ததாக 111 புகார்களும் பெறப்பட்டு உள்ளன.

மகிழ்ச்சி

ெதாலைந்து போன செல்போன் மீட்கப்பட்டது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த கிறிஸ்டோபர் கூறியதாவது:-

எனது மகனின் செல்போன் தொலைந்து விட்டது. இதனால் செல்போன் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அரைகுறை மனதோடு சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தேன். அதன்பிறகு சில நாட்களில் அதனை மறந்து விட்டேன். 4 மாதங்களுக்கு பிறகு திடீரென போலீசில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. உங்கள் செல்போன் மீட்கப்பட்டு விட்டது. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வந்து வாங்கி செல்லுங்கள் என்று கூறினார்கள். இதனால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். தற்போது ஆன்லைன் சம்பந்தமாக எந்த பிரச்சினை என்றாலும் சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவிக்குமாறு எனக்கு தெரிந்தவர்களிடம் கூறி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் விளக்கம்

இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-

ஆன்லைன் சேவைகளை பொதுமக்கள் மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். வங்கிகள் வாடிக்கையாளர்களை ஒருபோதும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களது வங்கி விவரங்களை கேட்பது இல்லை. வங்கியில் இருந்து பேசுவதாகவோ, சுகாதாரத்துறையில் இருந்து பேசுவதாகவோ, வங்கி கணக்கில் பணம் பிடித்தம் செய்யப்பட்டு இருப்பதாகவோ கூறி வங்கி கணக்கு விவரங்களை கேட்டால் தெரிவிக்க கூடாது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வங்கி கணக்கு, ஏ.டி.எம். கார்டு உள்ளிட்ட விவரங்களை தெரிவித்தால் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட வாய்ப்பு உள்ளது. வலைதளத்தில் வரும் வங்கி கஸ்டமர் கேர் எண்கள் போலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த எண்களை தொடர்பு கொள்ளுமபோது உதவுவது போன்று ஏதேனும் ஒரு லிங்கை அனுப்பி, ஓ.டி.பி. விவரங்களை பெற்று பணத்தை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட புகைப்படங்களை ஒருபோதும் யாரிடமும் பகிர வேண்டாம். முகநூலில் உங்களுக்கு தெரிந்தவர் பெயரில் போலி கணக்கு தொடங்கி பணம் உதவி கேட்க வாய்ப்பு உண்டு. எனவே, பணம் அனுப்பும் முன் அவரிடம் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ உறுதி செய்யவும்.

வைபை வசதி

மேலும் பொது இடங்களில் வைக்கப்பட்ட யு.எஸ்.பி. சார்ஜர்களில் சார்ஜ் போடுவதை தவிர்க்கவும். உங்களது தகவல்கள் 'ஜூஸ் ஜேக்கிங்' முறையில் திருட்டு போக வாய்ப்பு உள்ளது. பொது இடங்களில் உள்ள வைபை பயன்படுத்தும்போது உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, பொது இடங்களில் உள்ள வைபை பயன்படுத்தாதீர்கள். எந்த செயலிகளின் விவரங்களையும் முழுமையாக அறியாமல் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். ஆர்வத்தை தூண்டும் தலைப்புகளில் வரும் லிங்குக்கு பின்னால் தகவல், பணம் பறிக்கும் கும்பல் மறைந்து இருக்கிறார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்.

கடைகளில ஒட்டப்பட்டு உள்ள கியூஆர் கோடுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். தவறான முறையில் பண இழப்பு ஏற்பட்டால் உடனடியாக தேசிய உதவி எண்ணான கட்டணமில்லா உதவி எண் 155260 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தினசரி பண பரிமாற்றத்துக்கு தனி வங்கி கணக்கு குறைந்த இருப்பில் வைத்து பத்திரமாக கையாள வேண்டும். தவறு நடந்தாலும் பெரும் நஷ்டம் ஏற்படாமல் தவிர்க்க உதவும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாயாஜால கும்பல்

நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு கூறியதாவது:-

நெல்லை மாநகரில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்வேறு அலுவலகங்களுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதனால் சைபர் கிரைம் குற்றங்கள் தடுக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும், விழிப்புணர்வு அடையாதவர்கள் மர்ம கும்பல்களின் மாயாஜாலத்தில் சிக்கி பணத்தை இழந்து வருகிறார்கள். நெல்லை மாநகரில் கடந்த ஆண்டு 205 புகார்களும், இந்த ஆண்டு இதுவரை 185 புகார்களும் வந்துள்ளன. இந்த ஆண்டு மட்டும் 60 வழக்குகள் பதிவு செய்து உள்ளோம். இதன்மூலம் ரூ.36.32 லட்சம் மீட்டு கொடுக்கப்பட்டு உள்ளது. ரூ.1.52 கோடி வங்கிகளில் பிடித்து வைத்துள்ளோம். ரூ.78 லட்சம் மதிப்புள்ள 437 செல்போன்களை மீட்டு கொடுத்து உள்ளோம்.

புகார் அளிக்கலாம்

ஆன்லைன் மூலம் பணத்தை இழந்தவர்கள் பதற்றம் அடையக்கூடாது. உடனே 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். www.cybercrime.gov.in என்ற முகவரியில் புகார் அளிக்கலாம்.

செல்போனுக்கு வருகிற குறுந்தகவல்கள், 'லிங்க்' ஆகியவற்றில் பணத்தாசை காட்டுவார்கள். அதில் உள்ளே செல்வதை தவிர்க்க வேண்டும். வேலைவாய்ப்பு தருவதாக கூறி, சங்கிலி தொடர் போல் பணத்தை சுருட்டி விடுவார்கள்.

இதேபோல் கடன் வழங்கும் செயலிகளையும் பதிவிறக்கம் செய்யக்கூடாது. முக்கியமாக வீடியோ அழைப்பு வந்தால் எடுக்க கூடாது. நம்மை அழைத்தவர்கள் மூலம் நமது செயல்பாடுகள் வீடியோ காட்சியாக பதிவு செய்து வைத்து மிரட்டுவார்கள்.

மேலும் பரிசு விழுந்திருப்பதாகவும், பரிசு பொருட்கள் அனுப்பி வைப்பதாகவும் அதை விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு மட்டும் பணம் அனுப்புமாறும் கேட்பார்கள். அதை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

-----------------

(பாக்ஸ்) ஆன்ைலன் விளையாட்டால் ரூ.4¾ லட்சம் இழப்பு

நெல்லையில் சமீபத்தில் ஒரு சிறுவன் தந்தையின் செல்போனை எடுத்து, அதில் உள்ள செயலி மூலம் விளையாடி உள்ளான். அந்த செல்போனில் சிறுவனின் தந்தை தனது வங்கி கணக்கை ஆன்லைனில் இணைத்து வைத்திருந்தார். விளையாட்டுக்கு தேவையான பணத்தை வங்கி கணக்கில் இருந்து சிறுவன் அனுப்பிக் கொண்டே இருந்துள்ளான்.

சில நாட்களில் ரூ.4¾ லட்சம் மாயமாகி இருப்பதை கண்ட அந்த சிறுவனின் தந்தை அதிர்ச்சி அடைந்து, நெல்லை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் மகனின் ஆன்லைன் விளையாட்டால் இந்த வினை ஏற்பட்டது தெரியவந்தது.

------------

(பாக்ஸ்) சனி, ஞாயிற்றுக்கிழமைகளை குறிவைக்கும் கும்பல்

ஆன்லைன் மோசடிகளுக்கு மூல ஆதாரமாக இருப்பது வங்கி கணக்குதான். எனவே தான் வெள்ளிக்கிழமைகளில் குறிவைத்து லிங்க் மூலம் பணத்தை மர்ம கும்பல் சுருட்டுகிறார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை நாட்கள் என்பதால் வங்கி அல்லது அலுவலகங்களை தொடர்பு கொண்டு பணத்தை மீட்பதற்கு முடியாது. இதனால் மேற்கண்ட நாட்களை கும்பல் குறிவைக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் வடமாநில கும்பல்தான் என்று கூறப்படுகிறது.


Next Story